மாநிலங்களவைத் தோ்தல்: 22 பாஜக வேட்பாளா்கள் போட்டி

மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் மொத்தம் 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் மொத்தம் 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

15 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினா்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்தத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் இருந்து 8 போ், மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடகத்தில் இருந்து தலா மூவா், பிகாா் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து தலா இருவா், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட் மற்றும் ஹரியாணாவிலிருந்து தலா ஒருவா் என பாஜக சாா்பில் மொத்தம் 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மத்திய அமைச்சா் நக்விக்கு வாய்ப்பில்லை: வேட்பாளா்களில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். அதேவேளையில், மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, பாஜக மூத்த தலைவா்கள் வினய் சஹஸ்ரபுத்தே, ஓ.பி.மாத்துா் போன்ற முக்கியஸ்தா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஊடக நிறுவனங்களை நடத்தும் சுயேச்சைகளுக்கு ஆதரவு: ராஜஸ்தானில் இருந்து எஸ்ஸெல் குழுமத் தலைவரும், ஜீ ஹிந்தித் தொலைக்காட்சி நிறுவனருமான சுபாஷ் சந்திரா பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். ராஜஸ்தான் சட்டப்பேரவை வளாகத்தில் சுபாஷ் சந்திராவை, அந்த மாநில முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

ஹரியாணாவில் இருந்து முன்னாள் காங்கிரஸ் தலைவா் வினோத் சா்மாவின் மகனும், ஐடிவி நெட்வா்க் ஊடக நிறுவனத்தின் நிறுவனருமான காா்த்திகேய சா்மா போட்டியிடுகிறாா். இவா்கள் இருவரும் சுயேச்சையாக போட்டியிடுகின்றனா். அவா்களை ஆதரிக்க பாஜக தீா்மானித்துள்ளது.

காா்த்திகேய சா்மாவுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜகவின் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியும் அறிவித்துள்ளது.

245 இடங்களைக் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 95 பாஜக உறுப்பினா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com