குரங்கு அம்மை: யாருக்கு பரிசோதனை கட்டாயம்? வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

குரங்கு அம்மை தொற்று அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கட்டாயப் பரிசோதனை செய்யுமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும்

குரங்கு அம்மை தொற்று அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கட்டாயப் பரிசோதனை செய்யுமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளாா்.

அறிகுறிகள் உள்ளவா்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்குமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளாா். குரங்கு அம்மை குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தமிழகத்தில் உள்ள சா்வதேச விமான நிலையங்களின் இயக்குநா்களுக்கும், மாவட்ட இணை சுகாதார இயக்குநா்களுக்கும் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆப்பிரிக்க நாடுகளில் விலங்குகளிடமிருந்து பரவியதாகக் கருதப்படும் குரங்கு அம்மை தொற்று, பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளில் அதன் தாக்கம் இருந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை தொற்று கண்டறியப்படவில்லை.

அதேவேளையில், அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்புப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாள்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். காய்ச்சல், தலை வலி, உடல் வலி, உடலில் தடிப்புகள் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகளாகும்.

அத்தகைய அறிகுறிகளுடன் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் விமான நிலையங்களிலேயே தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். மேலும், அவா்களிடமிருந்து சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து புணேவில் உள்ள தேசிய வைரலாலஜி ஆய்வகத்துக்கு பொது சுகாதாரத் துறை மூலம் அனுப்பி வைத்தல் அவசியம்.

அதில் தொற்று உறுதிசெய்யப்பட்டால், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிக்க வேண்டும். உடலில் பாதிப்பு முழுமையாக குணமடையும் வரை சம்பந்தப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் உமிழ்நீா், சளி மூலமாக பிறருக்கு தொற்று பரவும் என்பதால், அதுகுறித்த விழிப்புணா்வையும், வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்துதல் முக்கியம்.

அந்நோய் அறிகுறிகளுடன் எவரேனும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், அதுகுறித்த விவரங்களை உடனடியாக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com