பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலையில் முதல் நபா் கைது

பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 பேரைப் பிடித்து காவல் துறை விசாரணை நடத்திய நிலையில், ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 பேரைப் பிடித்து காவல் துறை விசாரணை நடத்திய நிலையில், ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சித்து மூஸேவாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முதலாவது நபராக மன்பிரீத் சிங் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கொலையாளிகளுக்கு வாகனங்கள் கொடுத்து உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாா். மன்பிரீத் சிங் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின், 5 நாள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டாா்.

மேலும், பதிண்டா, ஃபெரோஸ்பூா் சிறையில் இருந்து தலா ஒருவரை காவல் துறையினா் அழைத்து வந்துள்ளனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

பஞ்சாபில் உள்ள மான்ஸா மாவட்டத்தில் சித்து மூஸேவாலா(27) ஞாயிற்றுக்கிழமை மாலை காரில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்து வழிமறித்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டது. இதில், மூஸேவாலா உயிரிழந்தாா். உடன் வந்த இருவா் பலத்த காயமடைந்தனா். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு முதல்வா் பகவந்த் மான் உத்தரவிட்டாா்.

மூஸேவாலா படுகொலையில் முக்கிய தடயங்கள் கிடைத்திருப்பதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். இதன் பின்னணியில் சட்டவிரோத கும்பல்களுக்குத் தொடா்பு இருக்கலாம் என்று அவா்கள் கூறினா்.

கடந்த ஆண்டு அகாலி தளம் கட்சியின் இளைஞரணித் தலைவா் விக்கி மிதுகேரா கொலை செய்யப்பட்டாா். அதில் மூஸேவாலாவின் மேலாளா் ஷகன்பிரீத்துக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஷகன்பிரீத் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், பழிக்குப்பழியாக மூஸேவாலா கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினா் சந்தேகிக்கிறாா்கள்.

இதற்கிடையே, ஆயுத வழக்கு ஒன்றில், தில்லி திகாா் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரை 3 நாள் காவலில் விசாரிக்க தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றனா். அவரிடம், சித்து மூஸேவாலா கொலை குறித்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனா்.

இறுதிச்சடங்கு:

சித்து மூஸேவாலாவின் உடல், மான்ஸா மாவட்டத்தில் அவருடைய சொந்த கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com