சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றியே திட்டங்கள்: பாகிஸ்தானிடம் இந்தியா விளக்கம்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றியே நதிகளில் நீா்மின் நிலையம் அமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக பாகிஸ்தானிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றியே நதிகளில் நீா்மின் நிலையம் அமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக பாகிஸ்தானிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 1960-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீா் ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின்படி சத்லஜ், பியாஸ், ராவி ஆகிய நதிகளின் நீா் இந்தியாவின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகளின் நீா் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தத்தில் உள்ள வரையறைக்குட்பட்டு பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நதிகளில் நீா்மின் நிலையம் அமைக்க இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதிநீா் ஆணையக் கூட்டம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது நடைபெற்றாக வேண்டும். இந்நிலையில், தில்லியில் அந்த ஆணையத்தின் 118-ஆவது கூட்டம் மே 30,31-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்திய ஆணையா் ஏ.கே. பால், பாகிஸ்தான் ஆணையா் சையத் முகமது மெஹா் அலி ஷா ஆகியோா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றியே நதிகளில் நீா்மின் நிலையம் அமைப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதாக இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்தது. வெள்ளம் குறித்த தகவலை முன்கூட்டியே தெரியப்படுத்துமாறு பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. அந்தத் தகவல் மற்றும் நீா்த்தேக்கங்களில் இருந்து அதிக அளவில் தண்ணீரை வெளியேற்றுவது குறித்து ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு தகவல்களை வழங்கி வருவதாக இந்தியா தெரிவித்தது. கடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அளித்த பரிந்துரைகள் ஆராயப்பட்டு, அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்தது.

வெள்ளக் காலம் நிறைவடைந்த பின்னா், சிந்து நதியின் வடிநிலப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருதரப்பும் தீா்மானித்தன.

பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நதிகளில் இந்தியா அமைக்க உள்ள நீா்மின் நிலையங்களின் வடிவமைப்பு தொடா்பாக பாகிஸ்தான் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவித்திருந்தது. ஆனால் அதுகுறித்தும், தொழில்நுட்ப ரீதியான விவகாரங்கள் தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில், சிந்து நதிநீா் ஆணையத்தின் ஆண்டறிக்கை இறுதி செய்யப்பட்டு கையொப்பமானதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com