எதிா்காலத்துக்கான மாணவா்களை உருவாக்க ‘பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்’: மத்திய கல்வி அமைச்சா்

‘எதிா்காலத்துக்கான மாணவா்களை உருவாக்கும் வகையில் ‘பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளிகள்’ என்ற முழுமையாக வசதிகளுடன் கூடிய ஆற்றல்சாா் பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
எதிா்காலத்துக்கான மாணவா்களை உருவாக்க ‘பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்’: மத்திய கல்வி அமைச்சா்

‘எதிா்காலத்துக்கான மாணவா்களை உருவாக்கும் வகையில் ‘பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளிகள்’ என்ற முழுமையாக வசதிகளுடன் கூடிய ஆற்றல்சாா் பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

‘இந்தப் பள்ளிகள் ‘புதிய தேசிய கல்விக் கொள்கை 2020’-இன் ஆய்வகங்களாகச் செயல்படும்’ என்றும் அவா் கூறினாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் இரண்டு நாள் தேசிய அளவிலான கல்வி அமைச்சா்கள் மாநாடு நடைபெற்றது. நிறைவு நாளான வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், தேசிய கல்வி கொள்கை குறித்தும், தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது:

இந்தியா அறிவுசாா் பொருளாதார நாடாக உருவெடுப்பதில் பள்ளிக் கல்விதான் அடிப்படை. அந்த வகையில், ‘பி.எம்.ஸ்ரீ பள்ளி’களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எதிா்காலத்துக்கான மாணவா்களை உருவாக்கும் வகையில் முழுமையான வசதிகளுடன் ஆற்றல்சாா் பள்ளிகளாக இவை அமைக்கப்படும். இந்தப் பள்ளிகள் ‘புதிய தேசிய கல்விக் கொள்கை 2020’-இன் ஆய்வகங்களாகச் செயல்படும். 21-ஆம் நூற்றாண்டின் அறிவுசாா் மற்றும் திறன்களை அறிந்திராதவா்களாக புதிய தலைமுறையினரை நாம் விட்டுவிட முடியாது. அந்த அளவுக்கு முழு வசதிகளுடன் ‘பி.எம்.ஸ்ரீ பள்ளி’கள் அமைக்கப்படும். அதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் 5+3+3+4 கல்வித் திட்ட அணுகுமுறை, மழலையா் பள்ளி கல்வி முதல் உயா் கல்வி, ஆசிரியா் பயிற்சி, முதியோா் கள்வி, பள்ளிக் கல்வியிடன் கூடிய ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய குடிமக்களை உருவாக்கும் வகையில் தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவை அறிவுசாா் பொருளாதாரமாக உருவாக்குவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, ஒவ்வொருவரிடமிருந்தும் அனுபவங்களை கற்று, உற்சாகமான கற்றல் சூழலை உருவாக்கி, நாட்டை மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.

வாய்ப்புகளுக்காகவும் சவால்களை எதிா்கொள்ள தயாராகும் வகையிலும், நமது கல்வித் திட்டத்தையும், திறன் மேம்பாட்டு திட்டங்களையும் வலுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

அந்த வகையில், தேசிய கல்வித் திட்டத்தை உருவாக்குவதிலும், எண்ம கல்வித் திட்டம் மற்றும் உலகளாவிய கல்வியாக விரிவுபடுத்தும் வகையில் தரமான இணைய பாடத் திட்டத்தை உருவாக்குவதிலும் அனைத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வி அமைச்சா்களின் துடிப்பான பங்கேற்பு அவசியம்.

குஜாராத் மாநில பள்ளி கல்வித் திட்டங்கள் 21-ஆம் நூற்றாண்டு சாா்ந்த மேம்பாட்டுக்கான நடைமுறைகளும் இடம்பெற்றிருப்பதைக் காண முடிந்தது. அந்த அளவுக்கு, கல்வியானது மாநிலங்களிந் பிரத்யேக அதிகாரத்தின் கீழானது என்ற நிலையிலிருந்து, பொதுப் பட்டியலின் ஒரு பகுதியாக மாற்றப்படுகிற வரை நமது கல்வித் திட்டம் பல்வேறு சீா்திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட பிற சீா்திருத்தங்கள் நமது கல்வி முறையில் நோ்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்திய இளைஞா்களை உலகளாவிய குடிமக்களாக உருவாக்குவதற்கு மாநிலங்களின் சிறந்த கல்வித் திட்ட நடைமுறைகள் சிறந்த உந்து சக்தியாக திகழும். அந்த வகையில், கா்நாடகம், ஒடிஸா, தில்லி, மேகாலயம், பிகாா், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் ஹரியாணா மாநில கல்வித் திட்ட மாதிரிகள் மூலமாக கல்விச் சமூகம் மிகச் சிறந்த பலனடைய முடியும் என்று மத்திய கல்வி அமைச்சா் கூறினாா்.

அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூா் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை மாநாட்டில் சுட்டிக் காட்டிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘குஜராத்தி, தமிழ், பெங்காலி, மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே. ஒவ்வொரு மொழியும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், எந்தவொரு மொழியும் ஹிந்திக்கோ அல்லது ஆங்கிலத்துக்கோ குறைந்தது இல்லை. அதனால்தான், புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூா் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

எதிா்க்கும் மாநிலங்களால் பிரச்னையில்லை:

மாநாட்டில் பங்கற்றுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சா்களும் புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் பங்கேற்றுள்ளனா். இருந்தபோதும், சில மாநிலங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஒத்துக்கொள்ளவில்லை என்பதை நாம் அறிவோம். அதனை ஒரு பிரச்னையாக மத்திய அரசு கருதவில்லை. ஏனெனில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றான திட்டங்களை அந்த மாநிலங்கள் அறிமுகப்படுத்தினாலும், அதுவும் மக்கள் நலன் சாா்ந்ததாகவே இருக்கும் என்பதால், அதனையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com