‘ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேட வேண்டாம்’: ஆா்எஸ்எஸ் தலைவா் கருத்துக்கு சிவசேனை ஆதரவு

வரலாற்றை மாற்ற முடியாது என்றும் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேட வேண்டாம் என்றும் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ள கருத்துக்கு சிவசேனை ஆதரவு தெரிவித்துள்ளது.

வரலாற்றை மாற்ற முடியாது என்றும் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேட வேண்டாம் என்றும் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ள கருத்துக்கு சிவசேனை ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பேசிய மோகன் பாகவத், ‘ஞானவாபி மசூதி - காசி விஸ்வநாதா் கோயில் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காணப்பட வேண்டும். ஹிந்து-முஸ்லிம் தரப்பினா் ஒன்றாக அமா்ந்து பிரச்னையை சமரசமாகப் பேசித் தீா்க்க வேண்டும். நீதிமன்றம் அதன் தீா்ப்பை வழங்கும்போது அது எப்படியிருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வரலாற்று உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது உள்ள முஸ்லிம்களோ, ஹிந்துக்களோ இதுபோன்ற பிரச்னைகளை உருவாக்கவில்லை. இந்தப் பிரச்னைகள் முற்காலத்தில் உருவானவை. ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை. நாள்தோறும் புதிய சா்ச்சைகளை ஏற்படுத்துவது தேவையற்றது’ என்றாா்.

இந்நிலையில் இது தொடா்பாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஆா்எஸ்எஸ் தலைவா் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். தேவையற்ற பிரச்னைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லையெனில் அது நாட்டை பாதிக்கும். சிவலிங்கங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டு, காஷ்மீரில் தினமும் பலியாகி வரும் உயிா்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் பண்டிட்டுகளை எப்படி காப்பாற்றப் போகிறாா்கள் என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com