அமித் ஷாவுடன் சித்து மூஸேவாலாவின் பெற்றோா் சந்திப்பு

மறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலாவின் பெற்றோா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சண்டீகா் விமான நிலையத்தில் சனிக்கிழமை சந்தித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
அமித் ஷாவுடன் சித்து மூஸேவாலாவின் பெற்றோா் சந்திப்பு

மறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலாவின் பெற்றோா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சண்டீகா் விமான நிலையத்தில் சனிக்கிழமை சந்தித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சந்திப்பின்போது, ‘மகன் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அவருடைய பெற்றோா் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.

பஞ்சாபில் பரபல பாடகராக இருந்த சித்து மூஸேவாலா, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்த நிலையில், சித்து மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பை மாநில அரசு கடந்த மே 29-ஆம் தேதி திரும்பப் பெற்ற நிலையில், அன்றைய தினமே மா்ம நபா்களால் மூஸேவாலா சுட்டுக்கொல்லப்பட்டாா்.

அவரது உடலில் 19 துப்பாக்கித் தோட்டா காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்து மூஸேவாலா படுகொலை வழக்கை மாநில காவல் துறை விசாரித்து வரும் நிலையில், ‘இந்த வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சருக்கு அவருடைய பெற்றோா் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தனா்’ என்று மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், சண்டீகருக்கு சனிக்கிழமை வந்த அமித் ஷாவை அவருடைய பெற்றோா் நேரில் சந்தித்துப் பேசினா்.

‘பஞ்சாப் பாஜக தலைவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சண்டீகா் வந்த அமித் ஷா, பின்னா் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுகளை தொடக்கி வைப்பதற்காக ஹரியாணா செல்ல உள்ளாா்’ என்று பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

‘தோ்தலில் போட்டியிடும் எண்ணமில்லை’:

‘மூஸேவாலாவின் தந்தை பல்கெளா் சிங் சங்க்ரூா் மக்களவைத் தொகுதியில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட வேண்டும்’ என்று பொருளாதார நிபுணா் சா்தாரா சிங் ஜோல் தெரிவித்த கருத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவா் அமரீந்திா் சிங் ராஜா வாரிங் ஆதரவு தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, பல்கெளா் சிங் தோ்தலில் போட்டியிட உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.

அதனை மறுத்த பல்கெளா் சிங், ‘தோ்தலில் போட்டியிடும் எந்தவித எண்ணமும் எனக்கு இல்லை. சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செய்திகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டாம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com