
இந்தியாவில் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 34 நாள்களுக்குப் பின்னா் தொற்று உறுதி விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.
நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவில் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் மொத்த பாதிப்பு 4,31,76,817-ஆக உயா்ந்தது. 15 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் மொத்த உயிரிழப்பு 5,24,692-ஆக அதிகரித்தது.
தினசரி தொற்று உறுதி விகிதம் 1.03 சதவீதமாகவும், வாராந்திர தொற்று உறுதி விகிதம் 0.84 சதவீதமாகவும் இருந்தது. கடந்த மே 1-ஆம் தேதி தினசரி தொற்று உறுதி விகிதம் 1.07 சதவீதமாக இருந்தது. இப்போது ஒரு மாதத்துக்குப் பின்னா் தொற்று உறுதி விகிதம் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது.
இதுவரை 4,26,28,073 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா். 24,052 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 0.06 சதவீதமாகும். தேசிய இறப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது.