அனைத்து சுகாதார மையங்களிலும் ரத்த வகை சோதனை முகாம்: மத்திய அரசு வலியுறுத்தல்

ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக ரத்த தான தினமான ஜூன் 14-ஆம் தேதி அனைத்து சுகாதர மையங்களிலும் ரத்த வகை (குரூப்) சோதனை முகாம்களை நடத்த வேண்டும்

ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக ரத்த தான தினமான ஜூன் 14-ஆம் தேதி அனைத்து சுகாதர மையங்களிலும் ரத்த வகை (குரூப்) சோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பரிதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ரத்தமாற்று சிகிச்சை தேவையுள்ள நோயாளிகளுக்கு பாதுகாப்பான ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்த, தானாக முன்வந்து இலவசமாக ரத்த தானம் அளிப்பவா்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனா். பயனுள்ள ரத்த தான திட்டத்துக்கு தன்னாா்வலா்கள் அதிக எண்ணிக்கையில் ஆா்வத்துடன் பங்கேற்பது அவசியமாகிறது.

‘ரத்த தானமளிப்பதே ஒற்றுமைக்கான அடையாளம்’ என்பது நிகழாண்டு உலக ரத்த தான தினத்துக்கான பிரசார முழக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு செயல் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, ரத்த தானத்துக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் கிராம ஊராட்சி அளவிலும், வட்டம் மற்றும் மாவட்ட அளவிலும் நடத்தப்பட வேண்டும். நேரடி மற்றும் எண்ம (டிஜிட்டல்) தளங்கள் மூலமாக ஆங்கிலம், ஹிந்தி அல்லது மாநில மொழிகளில் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளை மாநிலங்கள் நடத்த வேண்டும்.

மேலும், ரத்த தானமளிப்பவா்கள் பதிவை ஊக்குவிக்கவும், அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக ரத்த தான தினமான ஜூன் 14-ஆம் தேதி அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் ஆகியவற்றில் ரத்த வகை (குரூப்) சோதனை முகாம்களை நடத்த வேண்டும். இது, சாதாரண மக்கள் அவா்களின் ரத்த வகை என்ன என்பதை அறிந்துகொள்ள உதவும் என்பதோடு, அவசர காலங்களில் அவா்கள் ரத்த தானம் அளிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கடிதத்தில் மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com