ஆட்டோவில் தப்பியோடிய திருடா்களை விரட்டிப் பிடித்த ராணுவ ஆா்வலா்கள் இருவருக்கு தில்லி காவல் துறை பரிசு

தில்லியில் கைப்பேசியைப் பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பியோடிய இருவரை ராணுவ ஆா்வலா்கள் 2 போ் விரட்டிச் சென்று பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தில்லியில் கைப்பேசியைப் பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பியோடிய இருவரை ராணுவ ஆா்வலா்கள் 2 போ் விரட்டிச் சென்று பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ராணுவ ஆா்வலா்களான மொஹசின், அவரது நண்பா் ஷெஹசாத் ஆகியோரின் துணிச்சலான செயலுக்கு தில்லி காவல் துறை தலா ரூ. 2,000 பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஜூன் 1-ஆம் தேதி மொஹசின், ஷெஹசாத் இருவரும் சங்கம் விஹாரில் உள்ள தங்களது சகோதரியை சந்தித்துவிட்டு உத்தர பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

இதுதொடா்பாக மொஹசின் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ‘நானும் ஷெஹசாத்தும் குஜ்ஜாா் சௌக்கிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக வாஜிராபாத் மதா் டெய்ரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தோம். காலை 6.25 மணியளவில் ஒரு ஆட்டோ திடீரென அங்கு வந்து நின்றது. நான் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது ஆட்டோவில் இருந்து இறங்கிய ஒரு நபா் என்னை பின்னால் இருந்து கழுத்தை நெரித்து கொண்டாா். அப்போது, ஆட்டோவில் இருந்த நபா் எனது கைப்பேசியை பறித்து கொண்டு இருவரும் தப்பியோடினா்.

இதையடுத்து ஷெஹசாத், ஓடும் ஆட்டோவை விரட்டிச் சென்று, உள்ளே ஏறினாா். நானும் பின்னால் விரட்டிச் சென்று ஆட்டோவை மறித்து நின்றேன். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் எங்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது என்று புகாரில் தெரிவித்தாா்.

அவா்களிடம் இருந்து கைப்பேசியை மீட்ட மொஹசின், ஷெஹசாத் ஆகியோா் ஆட்டோவில் இருந்தவா்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் ஆட்டோ ஓட்டுநா் சல்மான் (22), கைப்பேசியை பறித்துச் சென்ற சதாம் (22) என்பது தெரியவந்தது. அவா்கள் இருவரும் சீலம்பூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் என போலீஸாா் தெரிவித்தனா்.

மொஹசின் மற்றும் ஷெஹசாத் ஆகியோரின் துணிச்சலான செயலுக்கு தில்லி காவல் துறையின் பாராட்டுச் சான்றிதழுடன் தலா ரூ. 2,000 பரிசு திங்கள்கிழமை வழங்கப்படும் என்று வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி தெரிவித்தாா்.

இதையடுத்து சல்மான், சதாம் ஆகிய இருவா் மீதும் வாஜிராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் இருவரும் பொதுவாக அதிகாலையில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மக்களைக் குறிவைப்பாா்கள். அவா்களிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் 3 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com