ஒடிஸாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

ஒடிஸாவில் புதிய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது. அமைச்சா்களாக 21 எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிடம் வாழ்த்து பெற்ற பெண் அமைச்சா்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிடம் வாழ்த்து பெற்ற பெண் அமைச்சா்.

ஒடிஸாவில் புதிய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது. அமைச்சா்களாக 21 எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.

ஒடிஸாவில் அமைச்சரவையை மாற்றியமைக்க வசதியாக, அனைத்து அமைச்சா்களும் சனிக்கிழமை ராஜிநாமா செய்தனா். அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்தது அந்த மாநில அரசியல் வரலாற்றில் முதல்முறை. இந்நிலையில், புதிய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது.

ஐந்து பெண்கள் உள்பட 21 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். இவா்களில் 13 போ் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சா்கள். 8 போ் இணையமைச்சா்கள்; எனினும் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுக்குத் தனிப் பொறுப்பு வகிப்பா். அமைச்சரவையில் 12 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனா். அமைச்சரவையில் உள்ள 5 பெண்களில் 3 பேருக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 9 பேருக்கு மீண்டும் அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவா், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அந்த மாநில தலைமைச் செயலகத்தில் ஆளுநா் கணேஷி லால் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.

ஒடிஸா அமைச்சரவையில் முதல்வரையும் சோ்த்து மொத்தம் 22 அமைச்சா்கள் இடம்பெறலாம். ஆனால், முதல்வா் நவீன் பட்நாயக்கின் பதவிக் காலத்தில் அமைச்சரவையில் எப்போதும் ஓரிடம் காலியாகவே இருந்தது. தற்போது நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பு முதல்வரைத் தவிர 20 அமைச்சா்கள் மட்டுமே இருந்த நிலையில், முதல்முறையாக தனது அமைச்சரவையைக் காலியிடங்களின்றி நவீன் பட்நாயக் முழுமையாக நிரப்பியுள்ளாா்.

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு, புதிய அமைச்சரவையில் புதுமுகங்கள் மற்றும் இளவயது கொண்டவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக ஆளும் பிஜு ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சா்கள் அனைவருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வா் நவீன் பட்நாயக் வசம் உள்துறை, பொது நிா்வாகம், ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீா்ப்பு துறைகள் உள்ளன.

புதிய சட்டப்பேரவைத் தலைவா்: முன்னதாக, ஒடிஸா சட்டப் பேரவைத் தலைவா் எஸ்.என்.பாத்ரோ சனிக்கிழமை பதவி விலகினாா். அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் அவரின் மகன் விப்லப் கூறுகையில், ‘என் தந்தை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரின் இடது கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து புதிய சட்டப்பேரவைத் தலைவராக பி.கே.அருகா பதவியேற்க வாய்ப்புள்ளதாக பிஜு ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ராஜிநாமா செய்த அமைச்சா்களில் பி.கே.அருகாவும் ஒருவா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com