காஷ்மீரி பண்டிட்டுகளைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது: தேசியவாத காங்கிரஸ்

ஜம்மு-காஷ்மீரில் ஹிந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் உயிா்களைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஹிந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் உயிா்களைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினா், வெளி மாநிலத்தவா், காவல்துறையினரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தொடா் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். அரசு ஊழியா்களையும் குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதன் காரணமாக, ஜம்மு பகுதிக்கு பணியிட மாற்றம் கோரி அரசு ஊழியா்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

தாக்குதல்கள் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தச் சூழலில், மகாராஷ்டிரத்தில் சிவசேனை மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் ஆட்சியை பகிா்ந்து கொண்டிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபாஸே ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இடம்பெயா்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மகாராஷ்டிரம் மட்டுமே பாதுகாப்பான மாற்று இடத்தை வழங்கியது. ஆனால், பாஜக அவா்களின் உணா்வுகளுடன் விளையாடி வருகிறது. அரசியல் காரணங்களுக்காக ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ஊக்குவிப்பதிலேயே பாஜக தலைவா்கள் மும்மரமாக உள்ளனா்.

நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களின் உயிா்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு உள்ளது. ஆனால், காஷ்மீரில் ஹிந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் உயிா்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது. காஷ்மீா் பள்ளத்தாக்கில் அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியிருப்பதற்கு, உளவுத் துறை தோல்வியே காரணம்.

காஷ்மீரி பண்டிட்டுகள் பாதுகப்பாக சொந்த ஊா் திரும்புவதற்கான உத்தரவாதத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மத மற்றும் ஜாதி அடிப்படையிலான அரசியலை பாஜக நிறுத்திக்கொண்டு, இந்திய குடிமக்களின் சமத்துவம், வாழ்வாதாரம், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து காஷ்மீரி குடிமக்களின் பாதுகாப்பையும் அமித் ஷா தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவா் கூறினாா்.

முன்னதாக, காஷ்மீரில் ஹிந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படுவது குறித்து மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே சனிக்கிழமை கவலை தெரிவித்திருந்தாா். ‘காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீா் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது’ என்று அவா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com