கடவுள் எங்கள் பக்கம்: கேஜரிவால்

சத்யேந்தர் ஜெயின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ. 2.85 கோடி பணம், 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்த நிலையில், ஆம் ஆத்மி எதிர்வினை ஆற்றியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது.

தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய ஆதாரங்கள் மற்றும் தொடர்புகள் கிடைத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மேலும் தகவல்களைத் திரட்ட தில்லியில் சத்யேந்தர் ஜெயின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை நடத்தியது.

அவருக்குத் தொடர்புடைய 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் ரூ. 2.85 கோடி பணம் மற்றும் 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது.

இந்தப் பணம் மற்றும் தங்கக் காசுகளுக்கான காரணம் குறித்து விளக்கப்படவில்லை என்றும் இவை ரகசியமான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அமலாக்கத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தனது அனைத்து அதிகாரங்களையும் கொண்டு பிரதமர் தற்போது ஆம் ஆத்மியைக் குறிவைக்கிறார். குறிப்பாக தில்லி மற்றும் பஞ்சாப் அரசுகளை அவர் குறிவைக்கிறார். பொய் மேல் பொய்.  உங்களிடம் (பிரதமர்) அனைத்து அமைப்புகளும் இருக்கலாம். ஆனால், கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார்."

கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:

"சத்யேந்தர் ஜெயின் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை முற்றிலும் தோல்வியடைந்த ஒன்று. அமலாக்கத் துறையால் வெறும் ரூ. 2.79 லட்சம்தான் கைப்பற்றப்பட்டது. அவை அனைத்திற்கும் சரியாக கணக்கு இருப்பதால் அதிலிருந்து ஒரு ரூபாய்கூட அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்ய முடியாது.

சர்வதேச அளவில் மோடியின் பிம்பம் உடைந்துபோனதால், சத்யேந்தர் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தவறான செய்தியைப் பரப்பும் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது" என்றார் சௌரவ் பரத்வாஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com