அமைச்சர் அமித் ஷாவுடன் மேற்கு வங்க ஆளுநர் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை சந்தித்து, அந்த மாநிலம் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை சந்தித்து, அந்த மாநிலம் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
 மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசின் பல்வேறு நடவடிக்கைகளை ஆளுநர் கேள்விக்குள்ளாக்கி வரும் நிலையில் அமித் ஷா உடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
 மேலும், மேற்கு வங்கத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்று கருத்து கூறியதற்கு மறுநாள் மேற்கு வங்க ஆளுநர் தன்கர், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார்.
 முன்னதாக, ஜகதீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
 அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "மேற்கு வங்கத்தில் மோசமான நிலைமையை நான் கண்டு வருகிறேன். ஓர் ஆளுநராக சவால்களை சந்தித்து வருகிறேன். அரசமைப்புச் சட்டத்தை மீறி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேற்கு வங்க ஆளுநர் தன்கர் சந்தித்தார் என்று தெரிவித்துள்ளது.
 ஆளுநர் கடந்த மாதம் 29-ஆம் தேதி கூறுகையில் "மாநிலத்தில் உளள அரசியல் சாசன அமைப்புகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் பல்வேறு வழக்குகளை சிபிஐ விசாரிப்பதற்கு நீதிமன்றங்கள் எடுத்த முடிவுகள் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன.
 இந்த விவகாரத்தில் மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எல்லைக் கோட்டைத் தாண்டியுள்ளார்' என்று தெரிவித்திருந்தார். திரிணமூல் காங்கிரஸ் பிரமுகரும் முதல்வர் மம்தாவின் நெருங்கிய உறவினரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியை பெயர் குறிப்பிடாமல் ஆளுநர் விமர்சித்திருந்தார்.
 அமித் ஷா- உத்தரகண்ட் ஆளுநர் சந்திப்பு: உத்தரகண்ட் ஆளுநர் குர்மித் சிங்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனது மாநிலம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குர்மித் சிங், "இதுவரை சார்தாம் எனப்படும் நான்கு (கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்) கோயில்களுக்கான புனித யாத்திரையை 16.5 லட்சம் பேர் மேற்கொண்டுள்ளனர். உத்தரகண்டில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 26 பேர் இறந்தனர்.
 விபத்தில் காயமடைந்தோருக்கும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும். விபத்து மீட்புப் பணிகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும் கண்காணித்து வருகின்றனர்' என்றார். இந்தப் பேருந்து விபத்தில் பலியானவர்களில் பலரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். விபத்து குறித்து கேள்விப்பட்டதும் ம.பி. முதல்வர் ஞாயிற்றுக்கிழமை இரவே உத்தரகண்ட் விரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com