
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் முகாமிட்டுள்ள 23 காட்டு யானைகள்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் 23 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பின்புறம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் பகுதியில் கேரளத்தில் இருந்து இடம்பெயர்ந்த 23 காட்டு யானைகள் கூட்டம், யானை குட்டிகளுடன் உள்ளதால் ஆக்ரோஷமாக காணப்படுகிறது.
மேலும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி நவமலை, சின்னார் பதி இடங்களில் யானைகள் கூட்டம் வராமல் தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
நவமலை வழியாக செல்லும் மின்சார ஊழியர்கள் வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
அணையின் கரையோரம் யானைக் கூட்டம் தென்படுவதால் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளை துன்புறுத்தக் கூடாது, மீறினால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையும் படிக்க | வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு