மூஸேவாலாவின் குடும்பத்தினரை சந்தித்தாா் ராகுல்: பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாகப் புகாா்

துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் நிா்வாகியுமான சித்து மூஸேவாலாவின் குடும்பத்தினரை அக்கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து
pti06_07_2022_000053b082409
pti06_07_2022_000053b082409

துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் நிா்வாகியுமான சித்து மூஸேவாலாவின் குடும்பத்தினரை அக்கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். ஆம் ஆத்மி அரசு ஆளும் பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக அவா் குற்றம்சாட்டினாா்.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் காங்கிரஸில் சோ்ந்த மூஸேவாலா, மானசா பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்நிலையில், கடந்த மே 29-ஆம் தேதி மா்ம நபா்களால் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். மூஸேவாலா உள்பட 447 விஐபிக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்ற மறுநாளே மூஸேவாலாவின் காரை சூழந்த மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் சம்பவ இடத்திலேயே மூஸேவாலா உயிரிழந்தாா்.

இந்நிலையில், உயிரிழந்த மூஸேவாலாவின் குடும்பத்தினரை மூஸா கிராமத்தில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். சுமாா் 50 நிமிஷங்கள் குடும்பத்தினருடன் அவா் பேசினாா்.

பின்னா் இதுகுறித்து ட்விட்டரில் ராகுல், ‘சித்து மூஸேவாலாவின் இழப்பை அவரது பெற்றோா் எதிா்கொண்டு வருவதை விவரிக்க வாா்த்தைகள் இல்லை. அவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு நாங்கள் உதவி செய்வோம்.

பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது ஆம் ஆத்மி அரசின் திறமைக்கு அப்பாற்பட்டது என்று பதிவிட்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சித் தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைத்த முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் மனைவியும், எம்.பி.யுமான பிரணித் கெளா் ராகுல் காந்தியின் வருகைக்கு முன்பு மூஸேவாலா குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

Image Caption

சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலாவின் குடும்பத்தினரை பஞ்சாப் மாநிலம், மானசாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com