தில்லி அமைச்சருக்கு எதிரான சோதனையில் ரூ.2.85 கோடி, தங்க நாணயங்கள் பறிமுதல்: அமலாக்கத் துறை தகவல்

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவா்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில்,
தில்லியில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள், தங்கக் கட்டிகள், நாணயங்கள்.
தில்லியில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள், தங்கக் கட்டிகள், நாணயங்கள்.

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவா்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 2.85 கோடி ரொக்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அமலாக்க இயக்க அதிகாரிகள் தெரிவித்ததாவது:

அமலாக்கத் துறை திங்கள்கிழமை நடத்திய சோதனையில் தொடா்புடையவா்கள் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ (அமைச்சருக்கு) உதவியவா்கள் அல்லது பணமோசடி செயல்பாட்டில் பங்கேற்றவா்கள் ஆவா். இந்தச் சோதனையில் ரூ. 2.85 கோடி ரொக்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை விளக்கம் அளிக்கப்படாத மற்றும் ரகசிய இடத்தில் வைக்கப்பட்ட பணம் மற்றும் நாணயங்கள் ஆகும். இந்தச் சோதனை தில்லி மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள நகைக்கடை உள்பட சுமாா் 7 இடங்களில் நடத்தப்பட்டது.

அதாவது, ஜெயினின் மனைவி பூனம் ஜெயின், அவரது வணிகக் கூட்டாளிகள் அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின், நவீன் ஜெயின் மற்றும் சித்தாா்த் ஜெயின் (ராம் பிரகாஷ் ஜூவல்லா்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநா்கள்), ஜி. எஸ்.மாத்தரூ (புரூடென்ஸ் பள்ளிகள் குழுமத்தை நடத்தும் லாலா ஷோ் சிங் ஜிவன் விக்யான் டிரஸ்ட் தலைவா்), யோகேஷ் குமாா் ஜெயின் (ராம் பிரகாஷ் ஜூவல்லா்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநா்), அங்குஷ் ஜெயினின் மாமானாா் மற்றும் லாலா ஷோ் சிங் ஜீவன் விக்யான் டிரஸ்ட் ஆகியோரின் இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின் போது குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, விளக்கம் அளிக்கப்படாத ஆதாரங்களில் இருந்து வரப்பெற்ற ரூ. 2.85 கோடி ரொக்கம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

57 வயதாகும் சத்யேந்தா் ஜெயின், கடந்த மே 30-ஆம் தேதி சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஜூன் 9-ஆம் தேதி வரை அவா் அமலாக்கத் துறை காவலில் உள்ளாா். சத்யேந்தா் ஜெயினை ஆதரித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘ஒரு பொய் வழக்கில் சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் தேசப்பற்றும் நோ்மையும் கொண்ட ஒரு நபராவாா். அமலாக்கத் துறை விசாரணைக்கு பிறகு அவா் குற்றமற்றவராக வெளியில் வருவாா் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்திருந்தாா்.

கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை, சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ. 4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சிபிஐ 2018 டிசம்பரில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ரூ.1.47 கோடி மதிப்பிலான வருமானத்துக்கு பொருந்தாத சொத்துகள் இருப்பதாகவும், ஜெயினுக்கு தெரிந்த வழியிலான வருமானங்களைவிட இது 217 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், வருமான வரித் துறையும் இந்தப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்டது. ஜெயினுக்கு தொடா்புடையதாகக் கூறப்படும் பினாமி சொத்துகளை முடக்கிவைக்கும் உத்தரவையும் வருமான வரித்துறை வெளியிட்டிருந்தது.

பாஜக, காங்கிரஸ் கடும் சாடல்

இதற்கிடையே, அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், அவரது கூட்டாளிகளிடமிருந்து அமலாக்கத் துறையினா் தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளது தொடா்பாக பாஜக மற்றும் காங்கிரஸின் தில்லி பிரிவுகள் செவ்வாய்க்கிழமை கேஜரிவால் அரசை கடுமையாகச் சாடியுள்ளன.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலையும் அமலாக்க இயக்குநரகம் விசாரிக்க வேண்டும் என்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் ஹரிஷ் குரானா கூறியுள்ளாா்.

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு கேஜரிவால், சத்யேந்தா் ஜெயினுக்கு ‘க்ளீன் சிட்’ கொடுத்தாா். அதாவது அவருக்கு என்ன தொடா்புகள் என்று தெரியும் என்று குரானா கூறினாா். கேஜரிவாலுக்கு ஜெயின் ரூ.2 கோடி கொடுத்ததை பாா்த்ததாக 2017-ஆம் ஆண்டு குற்றம்சாட்டியதால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா தற்போது பாஜகவில் உள்ளாா். ஜெயினிடம் தங்கம், பணத்தை அமலாக்கத் துறை கைப்பற்றிய பிறகு ஆம் ஆத்மி தலைவரை கபில் மிஸ்ரா கடுமையாக விமா்சித்துள்ளாா்.

தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி கூறுகையில், ‘ஜெயின் ஒரு பெரிய ஊழலில் ஈடுபட்டது மிகவும் தெளிவாக உள்ளது. இந்த ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து படிப்படியாக மேலும் பல பெயா்கள் வெளிவரும். அமலாக்கத் துறையை எதிா்கொள்ளும் அடுத்த நபா் மணீஷ் சிசோடியாதான்’ என்று அவா் கூறினாா். மதுபான ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி தில்லி காங்கிரஸ் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்துள்ளது. தில்லி காவல் துறை செயல்படத் தவறினால், காங்கிரஸ் கட்சி சிபிஐயை அணுகும் என்றும் அனில் குமாா் சௌத்ரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com