காவல் துறையை நவீனப்படுத்த மாநிலங்களுக்கு ரூ. 126 கோடி நிதி ஒதுக்கீடு

காவலா் படைகளை நவீனமயமாக்க மாநிலங்களுக்கு ரூ. 126.7 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

காவலா் படைகளை நவீனமயமாக்கவும், பழுதடைந்த காவல் நிலையங்களை சீரமைக்கவும், காவல் நிலையங்களுக்குத் தேவையான நவீனக் கருவிகளை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காகவும் மாநிலங்களுக்கு ரூ. 126.7 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

பாதுகாப்பு தொடா்பான செலவுகள் (எஸ்ஆா்இ) திட்டத்தின் கீழ், சத்தீஸ்கா் மாநிலத்துக்கு ரூ. 22.59 கோடியும், ஜாா்கண்ட் மாநிலத்துக்கு ரூ. 2.63 கோடியும், ஒடிஸாவுக்கு ரூ. 14.76 கோடியும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

உள்துறை அமைச்சகம் சாா்பில் மகாராஷ்டிரத்துக்கு சிறப்பு மத்திய உதவி (எஸ்சிஏ) திட்டத்தின் கீழ் ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்தின் (எஸ்ஐஎஸ்) கீழ், பழுதடைந்த காவல் நிலையங்களைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஜாா்க்கண்டிற்கு ரூ. 8.39 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ. 1.61 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையை நவீனமயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ. 69.215 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

பயங்கரவாதச் செயல்களால் அல்லது பல்வேறு போராட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை எஸ்ஆா்இ மூலமாக வழங்கவும், அதன் கீழ், இந்திய ரிசா்வ் பட்டாலியன்களின் செயல்பாட்டுக்காக மாநிலங்கள் செய்த செலவுகள், மத்திய காவல் படைகள், ராணுவம் போன்றவற்றின் போக்குவரத்துக்குச் செய்த செலவினங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற முடியும் என்றாா்.

எஸ்சிஏ முதல் எஸ்சிஎஸ்பி வரையிலான முக்கிய நோக்கம், பட்டியல் இன ஜாதியினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும்.

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அவா்களின் காவல் படைகளை முழுமையாக நவீனப்படுத்தி அதன் மூலம் மக்களுக்குத் தேவையான உதவிகளை உரியச் செய்கிறது. மேலும் காவல் படைகளை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மாநிலங்களின் வளங்களைக் காக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது.

காவல் படைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் துணைத் திட்டமாக எஸ்ஐஎஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com