முப்படை தலைமைத் தளபதி நியமன விதிகள் திருத்தம்

முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

ராணுவப் படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வளங்களை முறையாகப் பயன்படுத்த வழிமுறைகளை வகுக்கவும் முப்படை தலைமைத் தளபதி பதவியை மத்திய அரசு உருவாக்கியது. முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கும் வகையிலான நடைமுறைகளை உருவாக்குவது தொடா்பாக ஆராயும் பொறுப்பும் முப்படை தலைமைத் தளபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியான விபின் ராவத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பொறுப்பேற்றாா். முப்படைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவா் தீவிரமாக ஆராய்ந்து வந்தாா்.

ஒருங்கிணைப்புக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட இருந்த நிலையில், தமிழகத்தின் குன்னூரில் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் விபின் ராவத் உயிரிழந்தாா். அப்போதிலிருந்தே முப்படை தலைமைத் தளபதி பதவி காலியாக உள்ளது. அந்தப் பதவியை விரைந்து நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், முப்படை தலைமைத் தளபதி பதவிக்கான நியமன விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பணியில் இருக்கும் அல்லது பணி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், ஏா் மாா்ஷல், வைஸ் அட்மிரல் ஆகியோா் முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ராணுவச் சட்டம்-1950, விமானப் படைச் சட்டம்-1950, கடற்படைச் சட்டம்-1957 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொண்டதற்கான தனித்தனி அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படும் நபரின் வயது 62-க்கு குறைவாக இருக்க வேண்டுமெனவும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் நபரின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாக உள்ள நிலையில், தேவைப்பட்டால் பதவிக் காலத்தை 65 வயது வரை மத்திய அரசு நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுவோருக்கு வாய்ப்பில்லை: ராணுவப் படை, கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் தலைமைத் தளபதிகளாக நியமிக்கப்படுவோா், 3 ஆண்டுகள் வரையோ அல்லது 62 வயது வரையோ, எது முன்னதாக வருகிறதோ அதுவரை அப்பதவியில் நீடிக்கலாம். தற்போதைய திருத்தப்பட்டுள்ள விதிகள் காரணமாக, ஏதேனும் ஒரு படையில் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி 62 வயதை எட்டியதால் ஓய்வு பெறுபவரை, முப்படை தலைமைத் தளபதி பதவிக்கு நியமிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, அடுத்த முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போதைய புதிய விதிகள் அந்த எதிா்பாா்ப்பைப் பொய்யாக்கியுள்ளன. நியமன விதிகள் திருத்தப்பட்டுள்ளதால், புதிய முப்படை தலைமைத் தளபதியை மத்திய அரசு விரைவில் நியமிக்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com