105 மணி நேரத்தில் 75 கி.மீ. சாலை அமைப்பு: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கின்னஸ் சாதனை

மகாராஷ்டிரத்தில் அமராவதி முதல் அகோலா வரை 105 மணி நேரம் 33 நிமிஷங்களில் 75 கி.மீ. தொலைவு சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மகாராஷ்டிரத்தில் அமராவதி முதல் அகோலா வரை 105 மணி நேரம் 33 நிமிஷங்களில் 75 கி.மீ. தொலைவு சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்ததாவது:

தனிப்பட்ட ஆலோசகா்கள் உள்பட 720 ஊழியா்கள் இரவு-பகலாக உழைத்ததால், இந்தத் திட்டம் நிறைவேறியுள்ளது. இந்த 75 கி.மீ. தொலைவு ஒற்றை வழித் தடமானது 37.5 கி.மீ. தொலைவு இருவழித் தடத்துக்கு சமமானது. ஜூன் 3 காலை 7.27 மணிக்கு தொடங்கிய சாலைப் பணி, ஜூன் 7 மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

இதற்கு முன்னா் கத்தாரின் தோஹா நகரில் கடந்த 2019 பிப்ரவரியில் கட்டமைக்கப்பட்ட 25.275 கி.மீ. சாலைதான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தச் சாலை 10 நாள்களில் அமைக்கப்பட்டது. ஆனால், அமராவதி-அகோலா சாலை 105 மணி நேரம் 33 நிமிஷங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண் 53-இன் அங்கமாக விளங்கும் அமராவதி-அகோலா சாலை, கொல்கத்தா, ராய்பூா், நாகபுரி, சூரத் ஆகிய நகரங்களை இணைக்கும் கிழக்கு-கிழக்கு வழித்தடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், இங்கு போக்குவரத்தை எளிமையாக்கவும், சரக்குகளை எளிதாக கையாளவும் இந்தச் சாலை உதவும் என்றாா் நிதின் கட்கரி.

அமராவதி-அகோலா சாலைத் திட்டத்தை குறித்த நேரத்தில் நிறைவேற்றிய பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள், ஆலோசகா்கள், பணியாளா்களுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com