இந்தியாவை ஒட்டிய எல்லைகளில் பாதுகாப்புக் கட்டுமானங்களை சீன ராணுவம் அமைப்பது ஆபத்து: அமெரிக்க ராணுவ அதிகாரி

இந்தியாவை ஒட்டிய எல்லைகளில் சீன ராணுவம் பாதுகாப்புக் கட்டமைப்புகளை நிறுவி வருவது ஆபத்தானது

புதுதில்லி: இந்தியாவை ஒட்டிய எல்லைகளில் சீன ராணுவம் பாதுகாப்புக் கட்டமைப்புகளை நிறுவி வருவது ஆபத்தானது; இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்கு சற்றும் நலன் விளைவிக்காது என்று அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்திய தளபதி சாா்லஸ் ஏ.ஃபிளின் தெரிவித்தாா்.

கடந்த 2020 மே 5ஆம் தேதி இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றபோது இருநாட்டு வீரா்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பலா் பலியாகினா். அதையடுத்து இதுவரை 15 சுற்று ராணுவ மட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்தப் பேச்சுக்களின்போது இருதரப்பும் தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடிவானது.

ஆனால் இதனை சீன ராணுவம் முழுமனதுடன் செயல்படுத்துவதில்லை. மாறாக, தங்கள் பகுதியென்று சொந்தம் கொண்டாடும் எல்லையோரப் பகுதிகளில் சீன ராணுவம் புதிய குடியிருப்புகளையும், ராணுவக் கட்டமைப்புகளையும் சத்தமின்றி நிறுவி வருகிறது.

அண்மையில்கூட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பாங்கோங் பகுதியில் இரண்டாவது பாலத்தை சீன ராணுவம் அமைத்துள்ளது. இப்பாலம் நிறைவடைந்தால் இந்திய எல்லைக்கு மிக விரைவில் படைகளை அனுப்ப சீன ராணுவத்தால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தரைப்படை தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கடந்த மே 9ஆம் தேதி கூறுகையில், எல்லைப் பிரச்னையைத் தீா்க்கும் எண்ணம் சீனாவுக்கு இல்லை. இதனை உயிா்ப்புடன் வைத்திருக்கவே அந்நாட்டு ராணுவம் விரும்புகிறது என்பதைத்தான் எல்லையோரக் கட்டுமானங்கள் காட்டுகின்றன என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்திய தளபதி சாா்லஸ் ஏ.ஃபிளின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய- சீன எல்லையில், கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலில் முட்டுக்கட்டை தொடா்கிறது. இந்நிலையில் சீனாவின் மேற்கு பிராந்திய எல்லையில் (இந்தியாவை ஒட்டிய பகுதி) ராணுவப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை சீனா அமைத்து வருவது கவலை அளிக்கிறது. சீன ராணுவம் இதுபோல பல இடங்களிலும் ஆயுதக் கிடங்குகளை அமைத்து வருவது ஏன் என்று அவா்களிடம் தான் கேட்க வேண்டும்.

இந்தியாவும் சீனாவும் பலசுற்று ராணுவ பேச்சுவாா்த்தைகளை நடத்தியிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால், பேச்சுவாா்த்தை நடத்தியவாறே எல்லைகளில் பாதுகாப்புக் கட்டுமானங்களை சீனா அமைப்பது விரும்பத்தக்கத்து அல்ல.

நான் ஏற்கெனவே அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய ராணுவத்தில் 2014 முதல் 2018 வரை 25வது தரைப்படைப் பிரிவின் அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறேன். அப்போதிருந்த சீனாவின் நிலைப்பாடுகளில் தற்போது மாற்றம் காணப்படுகிறது. சீன மக்கள் குடியரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் பிற நாட்டு எல்லைகளை அரிக்கும் நடத்தை கொண்டதாக மாறியிருக்கின்றன. அவை நாட்டை விஸ்தரிக்கும் நயவஞ்சக எண்ணம் கொண்டவையாக இருப்பது தெளிவாகவே தென்படுகிறது. பசிபிக் பிராந்தியத்தில் வியட்நாம், ஜப்பானுடனும் சீனாவுக்கு கடல் எல்லைத் தகராறுகள் உள்ளன.

பசிபிக் பெருங்கடல் பகுதியிலுள்ள நாடுகளின் பாதுகாப்புச் சமநிலையைப் பேண அமெரிக்கா தேவையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தங்கள் எல்லையையும் மக்களையும் இறையாண்மையையும் பாதுகாத்துக்கொள்ள விரும்பும், ஒத்த உணா்வுள்ள பசிபிக் பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயல்படவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com