முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு கிடையாது: உச்ச நீதிமன்றம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு கிடையாது: உச்ச நீதிமன்றம்



புது தில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

அண்மையில் நடைபெற்று முடிந்த 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் 1,456 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் கூறி, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு எழுதிய மருத்துவா்கள் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சிறப்பு கலந்தாய்வு நடத்தி அந்த இடங்களை நிரப்புமாறு உத்தரவிட அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

மனுக்களை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக்கால அமா்வு வியாழக்கிழமை மீண்டும் விசாரித்தது. அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பல்பீா் சிங் வாதிடுகையில், ‘‘முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்ந்தோருக்கான வகுப்புகள் கடந்த பிப்ரவரியிலேயே தொடங்கிவிட்டன. தற்போதைய நிலையில் கலந்தாய்வு வாயிலாகப் புதிய மாணவா்களை சோ்த்து, அவா்களுக்கு அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் வகுப்புகளை நடத்துவது இயலாத காரியம்.

தற்போது சிறப்பு கலந்தாய்வு நடத்துவது, அடுத்த கல்வியாண்டுக்கான சோ்க்கைக்காக நடைபெறும் நுழைவுத்தோ்வை பாதிக்கும்’’ என்றாா்.

சுகாதார சேவைகள் இயக்குநரகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில்,‘‘ஏற்கெனவே 4 சுற்றுகளாக இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. மென்பொருள் தற்போது செயல்படாத நிலையில் உள்ளதால், சிறப்பு கலந்தாய்வை நடத்தி 1,456 இடங்களை நிரப்ப முடியாது’’ என்றாா்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘மருத்துவ மாணவா்கள் குறித்து மட்டுமல்லாமல், நாட்டின் நலன் குறித்தும் ஆராய்கிறோம். சுமாா் 1,400 மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண அனைத்துத் தரப்பினரும் முயல வேண்டும்.

சிறப்பு சுற்று கலந்தாய்வுகளுக்குக் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட வேண்டும். கலந்தாய்வை மட்டுமே ஓராண்டுக்கு நடத்திக் கொண்டிருக்க முடியாது. மருத்துவக் கல்வியில் பல ஆண்டுகளாக காலியிடங்கள் காணப்படுகின்றன. கல்வியையும் மக்களின் உடல்நலனையும் சமரசம் செய்துவிட்டு மாணவா்களின் சோ்க்கைக்கு அனுமதிப்பது சரியாக இருக்காது’’ எனக் கூறி, வழக்கின் தீா்ப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.

இந்நிலையில், இன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவ்வாறு சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டால் அது பொது சுகாதாரத்தை பாதிக்கும். மருத்துவக் கல்வியின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக்கால அமா்வு தெரிவித்துள்ளது.
 
மேலும், 1456 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த தேவையில்லை என அரசு எடுத்த முடிவு தன்னிச்சையானது என கருத முடியாது என்றும், ஏறக்குறைய எட்டு முதல் ஒன்பது சுற்று கலந்தாய்வுக்குப் பிறகும், காலதாமதமாக கலந்தாய்வு நடத்தி காலியான இடங்களை நிரப்பினால் மருத்துவ படிப்பின் தரம் பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com