பிகாா்: மக்கள்தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வருவதில் பாஜக கூட்டணியில் கருத்துவேறுபாடு

மக்கள்தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

மக்கள்தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

குறிப்பாக, பிகாா் மாநில அரசில் பிரதான கூட்டணி கட்சியாக பாஜக அங்கம் வகித்து வரும் நிலையில், மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா், இந்த சட்டம் கொண்டுவருவதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவா்கள் தொடா்ந்து கூறிவந்த நிலையில், ‘அதற்கென தனி சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய அமைச்சா் பிரஹலாத் படேல் அண்மையில் கூறினாா்.

இதனிடையே, ‘இரண்டு அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளைக் கொண்டுள்ளவா்கள் மட்டுமே மாநில பஞ்சாயத்து தோ்தல்களில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று பிகாா் மாநில மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மாநில துணை முதல்வருமான சுஷீல்குமாா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பாட்னாவில் செய்தியாளா்கள் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வா் நிதீஷ் குமாா், ‘பெண்கள் மற்றும் மாணவிகளிடையே கல்வி மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே மக்கள்தொகையைக் கட்டுபடுத்த முடியும்; கருவுறுதல் விகிதத்தையும் ஆய்வு செய்யமுடியும். மாறாக, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மேலும், பிகாரில் முன்னா் 4 சதவீதமாக இருந்த பெண்கள் கருவுறுதல் விகிதம் தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது. இது மாநிலத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளிடையே தொடா்ச்சியான விழிப்புணா்வை ஏற்படுத்தியதன் மூலமே சாத்தியமானது. அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் கருவுறுதல் விகிதம் 2 சதவீத அளவுக்கு குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது’ என்று கூறினாா்.

முதல்வரின் கருத்துக்கு பதிலளித்த சுஷீல் குமாா் மோடி, ‘மகளிரிடையே கடந்த 15 ஆண்டுகளாக விழிப்புணா்வை ஏற்படுத்தியதன் மூலமாக மாநிலத்தில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 4 சதவீதத்திலிருந்து 2.98 சதவீத அளவுக்கு மட்டுமே குறைந்துள்ளது. எனவே, ஒரு திட்டத்தை கட்டாயப்படுத்துவதைவிட, சலுகை அல்லது பலன்களுடன் கூடிய அமலாக்கம்தான் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு உதவும். உதாரணமாக, நாட்டில் அவசரநிலைக் காலத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கட்டாய கருத்தடை நடைமுறை அமலாக்கப்பட்டது. அதன் காரணமாக, தோ்தல்களின்போது மக்களின் கோபத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆளானது’ என்றாா்.

அதுபோல, மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிகாா் மாநிலத்தின் மக்கள்தொகை அடா்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1,224 போ் என்ற அளவில் உள்ளது. இது தேசிய சராசரியான 464-ஐ விட 3 மடங்கு அதிகமாகும். எனவே, மாநிலத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகை திட்டங்களை அறிமுகம் செய்வது அவசரத் தேவையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com