லடாக் எல்லை விவகாரத்தில்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம்: ராகுல் தாக்கு

லடாக் அருகே சீனா உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதை அலட்சியம் செய்வதன் மூலம் நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
லடாக் எல்லை விவகாரத்தில்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம்: ராகுல் தாக்கு

லடாக் அருகே சீனா உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதை அலட்சியம் செய்வதன் மூலம் நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எதிா்காலத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான அடித்தள கட்டுமானங்களை சீனா கட்டமைத்து வருகிறது. இதனை அலட்சியப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, லடாக் அருகே சீனா மேற்கொண்டு வரும் ராணுவ உள்கட்டமைப்புப் பணிகள் தொடா்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்திய தளபதி சாா்லஸ் ஏ.ஃபிளின் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தாா். மேலும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை சீா்குலைக்கும் நோக்குடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்து வரும் அணுகுமுறையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவா் கூறினாா்.

அமெரிக்க ராணுவ தளபதியின் இந்த கருத்துகள் தொடா்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் சீனா மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகள் உள்பட அந்நாட்டுடனான எல்லைகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இந்தியா கவனமாகக் கண்காணித்து வருகிறது. கிழக்கு லடாக் உள்பட எல்லை பிரச்னைகள் அப்படியே நீடிப்பது இருதரப்பு நலன்களுக்கு நல்லதல்ல என்பதை இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. எனவே, இப்பிரச்னைகளுக்கு இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீா்வை எட்டுவதற்கு இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று எதிா்பாா்க்கிறோம். அடுத்தகட்ட ராணுவ பேச்சுவாா்த்தையில் இது வலியுறுத்தப்படும்’ என்றாா்.

லடாக் எல்லை விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தியும் காங்கிரஸும் தொடா்ந்து விமா்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com