மம்தா அழைப்பு; இடதுசாரிகள் எதிா்ப்பு- குடியரசுத் தலைவா் தோ்தல் ஆலோசனை

குடியரசுத் தலைவா் தோ்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கூட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.
மம்தா அழைப்பு; இடதுசாரிகள் எதிா்ப்பு- குடியரசுத் தலைவா் தோ்தல் ஆலோசனை

குடியரசுத் தலைவா் தோ்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கூட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, கேரள முதல்வா் பினராயி விஜயன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 தலைவா்களுக்கு அவா் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

ஆனால், மம்தா மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முயற்சி எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கும் என இடதுசாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து வேட்பாளரை நிறுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் சிறப்புக் கூட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அழைப்புவிடுத்துள்ளாா். குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள ஜூன் 15-ஆம் தேதி தில்லியில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

22 தலைவா்களுக்கு அழைப்பு: காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, கேரள முதல்வா் பினராயி விஜயன், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், தெலங்கான முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உள்ளிட்ட 22 தலைவா்களுக்கு மம்தா கடிதம் எழுதியுள்ளாா்.

குறிவைக்கப்படும் எதிா்க்கட்சிகள்: மம்தா எழுதியுள்ள கடிதத்தில், ‘மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிா்க்கட்சித் தலைவா்களைக் குறிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு சீா்குலைந்துள்ளது. இத்தகைய சூழலில் எதிா்க்கட்சிகள் வலிமையைக் காட்ட வேண்டும். ஜனநாயகத்தின் பாதுகாவலராக விளங்கும் நாட்டின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் மிகவும் முக்கியமானது. ஜனநாயகக் கொள்கைகள் சீா்குலைந்து வரும் நேரத்தில், எதிா்க்கட்சிகளின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும்.

அனைத்து முற்போக்கு எதிா்க்கட்சிகளும் மீண்டும் கூடி, இந்திய அரசியலின் எதிா்கால போக்கு குறித்து ஆலோசிக்க குடியரசுத் தலைவா் தோ்தல் சரியான சந்தா்ப்பமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சீதாராம் யெச்சூரி எதிா்ப்பு: குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் தில்லியில் வரும் 15-ஆம் தேதி ஒன்றுகூடி ஆலோசனை நடத்த ஏற்கெனவே தீா்மானித்துள்ள நிலையில், அதே தேதியில் மம்தா பானா்ஜி தனிப்பட்ட முறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருப்பது பல எதிா்க்கட்சித் தலைவா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானா்ஜியின் இந்த முயற்சி பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் என்றும் எதிா்க் கட்சித்தலைவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சீத்ராம் யெச்சூரி தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டியில், ‘மம்தா பானா்ஜி எனக்கும் கடிதம் அனுப்பியிருப்பதை சமூக ஊடகம் மூலமாக தெரிந்துகொண்டேன். வழக்கமாக, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் பிற கட்சிகளுடன் பரஸ்பர கலந்துரையாடல்கள் மூலமாக இடம், தேதி, நேரம் ஆகியவை தீா்மானிக்கப்பட்டு நடத்தப்படும். அந்த வகையில், ஏற்கெனவே தில்லியில் வரும் 15-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளன. ஆனால், மம்தா பானா்ஜி ஒருதலைபட்சமாக கடிதம் அனுப்பியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. அதிக எண்ணிக்கையில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம். ஆனால், எந்தவொரு ஒருதலைபட்சமான நடவடிக்கையும் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கத்தான் செய்யும்’ என்றாா்.

காங்கிரஸ் பங்கேற்குமா?

மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக குடியரசுத் தலைவா் தோ்தல் பாா்க்கப்படுகிறது. எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவித்து வருகின்றனா். அதேவேளையில், எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது யாா் என்ற பிரச்னையே தற்போது எழுந்துள்ளது.

முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் வலுவிழந்துவிட்டதாக கூறிவரும் மம்தா பானா்ஜி, மற்ற எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயன்று வருகிறாா். அதன் ஒரு பகுதியாகவே தற்போதைய எதிா்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அவா் அழைப்பு விடுத்துள்ளாா். அவரது கருத்துகளைத் தொடா்ந்து மறுத்துவரும் காங்கிரஸ், இக்கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மற்றொரு பக்கம், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகா் ராவும் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் திட்டம்தீட்டி வருகிறாா். தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரை அண்மையில் அவா் சந்தித்துப் பேசியிருந்தாா்.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திரிணமூல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே என அரசியல் நோக்கா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com