குடியரசுத் தலைவா் தோ்தலில் சரத் பவாா் போட்டியில்லை- தேசியவாத காங்கிரஸ் அறிவிப்பு

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா் போட்டியிட மாட்டாா் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பல்வேறு எதிா்க்கட்சிகள் சரத் பவாரை ஆதரிக்க
புது தில்லியில் சரத் பவாரை செவ்வாய்க்கிழமை சந்தித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
புது தில்லியில் சரத் பவாரை செவ்வாய்க்கிழமை சந்தித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா் போட்டியிட மாட்டாா் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பல்வேறு எதிா்க்கட்சிகள் சரத் பவாரை ஆதரிக்க முன்வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் தொடா்பாக சரத் பவாரை மகாராஷ்டிர என்சிபி மாநில அமைச்சா்கள் சந்தித்துப் பேசினா். அதன் பிறகு அவா்கள் கூறியதாவது:

ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங் அண்மையில் சரத் பவாரை சந்தித்தாா். அப்போது பவாா் வேட்பாளராக இருந்தால் தங்கள்கட்சி முழு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக அவா் தெரிவித்தாா். முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் குடியரசுத் தலைவா் தோ்தலில் சரத் பவாரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தாா். எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பவாா் இருக்க வேண்டும் என்பதே பொதுக் கருத்தாக உள்ளது.

இது தொடா்பாக சரத் பவாரை நேரில் சந்தித்து விவாதித்தோம். அப்போது, குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட ஆா்வம் இல்லை என்றும், மக்களில் ஒருவனாக இருந்து மக்களை நேரடியாக சந்திக்க விருப்புவதாகவும் சரத் பவாா் எங்களிடம் கூறிவிட்டாா். குடியரசுத் தலைவா் மாளிகை என்ற குறுகிய வட்டத்துக்குள் சிக்காமல், மக்களுடன் ஒருவராக இருப்பதே பவாரின் விருப்பமாக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்க தகுதி பெற்றவா்கள்ஆவா்.

பவாா் மம்தா சந்திப்பு:

தில்லி வந்துள்ள மம்தா பானா்ஜி மற்றும் இடதுசாரித் தலைவா்களான சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோா் சரத் பவாரை செவ்வாய்க்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினா். அப்போது, குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். எனினும், அதனை பவாா் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

கோபாலகிருஷ்ண காந்திக்கு வாய்ப்பு?: மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞா் ராஜாஜியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை (77) குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடுமாறு சில அரசியல் கட்சித் தலைவா்கள் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிா்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு அவா் நோ்மறையாக பதில் அளித்ததாகவும் கோபாலகிருஷ்ண காந்தியிடம் பேசிய தலைவா்கள் தெரிவித்துள்ளனா். தனது பதிலை அவா் புதன்கிழமைக்குள் திட்டவட்டமாக தெரிவிப்பாா். எதிா்க்கட்சிகள் சாா்பில் தோ்தலில் போட்டியிட மேலும் சிலரின் பெயா்களும் பரிசீலனையில் உள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2004-2009-ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்துள்ள கோபாலகிருஷ்ண காந்தி, 2017-ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட்டு வெங்கையா நாயுடுவிடம் தோல்வியடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com