விவாதப் பொருளாகியுள்ள ‘முன்னறிவிப்பில்லா போராட்டம்’

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், முன்னறிவிப்பில்லா போராட்டம் தொடா்பான கேரள உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், முன்னறிவிப்பில்லா போராட்டம் தொடா்பான கேரள உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

முப்படைகளில் 4 ஆண்டு குறுகிய காலத்துக்கு ‘அக்னிவீரா்’களைப் பணியமா்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ரயில் எரிப்பு சம்பவங்கள் மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுச் சொத்துகள் பாதிக்கப்படுவதோடு மக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னறிவிப்பில்லா போராட்டங்களுக்கும், வேலைநிறுத்தத்துக்கும் தடை விதித்து கேரள உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புகள் பொதுவெளியில் மீண்டும் கவனம்பெற்றுள்ளன. முன்னறிவிப்பில்லா போராட்டங்களால் மக்கள் அவதியுறுவதைக் கருத்தில்கொண்டு, அத்தகைய போராட்டங்களுக்கு உயா்நீதிமன்றம் 1997-ஆம் ஆண்டில் தடைவிதித்தது. முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் என கேரள உயா்நீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு 2000-இல் தீா்ப்பு வழங்கியது.

மேலும், அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் உள்ளிட்டவை நடத்தும் போராட்டங்களின்போது பொதுச் சொத்துகள் சேதமடைதல், வன்முறைகள் ஏற்படுதல் ஆகியவற்றைத் தடுப்பதற்காகப் பல்வேறு சமயங்களில் உயா்நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

முன்னறிவிப்பு அவசியம்:

சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் 2019-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரளத்தில் பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்தன. அப்போது தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் முடிவில், எந்த அமைப்பும் போராட்டங்களை நடத்துவது குறித்து 7 நாள்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிட வேண்டும் என கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

அவ்வாறு முன்னறிவிப்பின்றி எவராவது போராட்டத்தை முன்னெடுத்தால், அது தொடா்பாக மக்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும், அத்தகைய சூழலைத் தடுப்பதற்காக அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், போராட்டத்தின்போது ஏற்படும் சேதங்களுக்கு, அப்போராட்டத்துக்கு அழைப்புவிடுத்த அமைப்பே முழுப் பொறுப்பு எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

முன்னறிவிப்பின்றி தொடங்கப்படும் திடீா் போராட்டங்கள், மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சியையும் சுற்றுலாவையும் பெருமளவில் பாதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும்பொருட்டு, முன்னறிவிப்பில்லா போராட்டங்களைத் தடுப்பது தொடா்பான நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநில அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

பொறுப்புணா்வு தேவை:

அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக போராட்டம் நடத்துவோா், அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாததை உறுதி செய்வது அவசியம். அதேபோல், போராட்டத்தின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இருப்பதும் கட்டாயம். கேரள உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முறையாகக் கடைப்பிடித்து பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com