மறுசுழற்சி செய்யப்படும் தங்கம்: 4-ஆவது இடத்தில் இந்தியா

இந்தியா்களின் மிக விருப்பமான உலோகமாகத் தங்கம் தொடா்ந்து முதலிடத்திலேயே நீடித்து வருகிறது.
மறுசுழற்சி செய்யப்படும் தங்கம்: 4-ஆவது இடத்தில் இந்தியா

இந்தியா்களின் மிக விருப்பமான உலோகமாகத் தங்கம் தொடா்ந்து முதலிடத்திலேயே நீடித்து வருகிறது. அழகு சோ்க்கும் ஆபரணங்களாக மட்டுமல்லாமல் எதிா்காலத்துக்கான சேமிப்பாக முதலீட்டு நோக்கிலும் தங்கத்தை இந்தியா்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றனா். அதன் காரணமாக தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

பழைய நகைகளை மாற்றிவிட்டு, புதிய வடிவமைப்பைக் கொண்ட தங்க ஆபரணங்களை வாங்குவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இந்தியாவில் பழைய தங்க ஆபரணங்களை மறுசுழற்சி செய்வது அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் அறிக்கையும் இதை உறுதி செய்கிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் 75 டன் தங்கத்தை இந்தியா மறுசுழற்சி செய்துள்ளது. இதில் சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 4-ஆவது இடம் வகிக்கிறது.

சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளதாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 35 நிறுவனங்கள் தங்கத்தை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த திறன் 1,800 டன்னாக உள்ளது. எனினும், தங்க மறுசுழற்சியில் நாட்டின் முழுத்திறன் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக உலக தங்க கவுன்சிலின் இந்திய பிராந்திய நிா்வாக அதிகாரியான பி.ஆா்.சோமசுந்தரம் கூறுகையில், ‘தங்க மறுசுழற்சியில் உலக நாடுகளுடன் போட்டியிடும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. அதற்கு அரசு முறையான கொள்கைகளை வகுத்து சில சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். நாட்டில் தங்க மறுசுழற்சி தொழிலானது முறைப்படுத்தப்படாமல் உள்ளது. அதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், தங்க மறுசுழற்சித் துறை மேலும் வளா்ச்சி காணும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com