தமிழகத்தின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டில் அணை கட்ட முடியாது: அனைத்துக் கட்சி குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டு பகுதியில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் அணை கட்ட முடியாது என்பதை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மீண்டும் உறுதியளித்துள்ளதா
தமிழகத்தின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டில் அணை கட்ட முடியாது: அனைத்துக் கட்சி குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டு பகுதியில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் அணை கட்ட முடியாது என்பதை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மீண்டும் உறுதியளித்துள்ளதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தில்லியில் புதன்கிழமை தெரிவித்தார்.
 மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 13 கட்சிகள் அடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தில்லியில் உள்ள புதன்கிழமை சந்தித்து மனு அளித்தது.
 இந்தக் குழுவில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் (திமுக), நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ (மதிமுக), தம்பிதுரை (அதிமுக) மற்றும் ஜி.கே.மணி (பாமக), சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (பாஜக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூ), பி.சண்முகம் (மார்க்சிஸ்ட்), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஏ.கே.பி. சின்ராஜ் (கொங்கு நாடு மக்கள் கட்சி), எம். ஜகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
 இதைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. மேக்கேதாட்டு விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழு சார்பில் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம். மத்திய அமைச்சருடனான பேச்சு சுமுகமாக இருந்தது. மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பேசுவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு எந்தவித அதிகார வரம்பும் இல்லை என்பதை மத்திய அமைச்சரிடம் விளக்கினோம். ஆனால், ஆணையத்துக்கு உரிமையும், அதிகார வரம்பும் உண்டு என தங்களுடைய வழக்குரைஞர் கருத்து அளித்துள்ளாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்த அதிகார வரம்பு விவகாரம் குறித்து தமிழகம் சார்பிலும் சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு அளிக்கிறோம் என்று மத்திய அமைச்சரிடம் தெரிவித்தோம். இந்த விவகாரம் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவு காணலாம் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
 மேலும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் காவிரியில் எந்த அணையையும் கட்ட முடியாது என்பதை மீண்டும் மத்திய அமைச்சர் தமிழக அரசியல் கட்சிகளிடம் உறுதியளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதித்தால் தமிழகம் எதிர்த்து வாதிடும். ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தமிழகத்தின் கருத்துக்கு ஆதரவாக உள்ளனர் என்பதையும் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தோம் என்றார் துரைமுருகன்.
 முன்னதாக, தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, தமிழக அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
 கடந்த ஓராண்டுக்கு (2021 ஜூலை 6) முன்பு இதே மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சி குழு தில்லி வந்து மத்திய அமைச்சரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையத்தினர் கடந்த ஜூன் 17-ஆம் தேதி மேட்டூர் அணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com