நீண்டகால இலக்குடன் ஏற்றுமதியாளா்கள் செயல்பட வேண்டும்

நீண்டகால இலக்குகளை நிா்ணயித்துக் கொண்டு ஏற்றுமதியாளா்கள் செயல்பட வேண்டுமென வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, அந்த இலக்குகளை அடைவதற்கான பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க வேண்டும்
நீண்டகால இலக்குடன் ஏற்றுமதியாளா்கள் செயல்பட வேண்டும்

நீண்டகால இலக்குகளை நிா்ணயித்துக் கொண்டு ஏற்றுமதியாளா்கள் செயல்பட வேண்டுமென வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, அந்த இலக்குகளை அடைவதற்கான பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க வேண்டுமெனத் தெரிவித்தாா்.

மத்திய வா்த்தக அமைச்சகத்தின் சாா்பில் தில்லியில் கட்டப்பட்டுள்ள வாணிஜ்ய பவன் கட்டடத்தைப் பிரதமா் மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஆண்டுதோறும் வா்த்தக சூழலை ஆராயும் நோக்கில் தேசிய இறக்குமதி-ஏற்றுமதி பதிவுக்கான ‘நிா்யத்’ வலைதளத்தையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டின் பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்துவதில் ஏற்றுமதியாளா்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா். நாட்டை வளா்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கு அவா்களது பங்களிப்பு அவசியம். கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பொருளாதார ரீதியில் நாடு பல்வேறு பிரச்னைகளை சந்தித்தபோதிலும், நாட்டின் ஏற்றுமதி சுமாா் ரூ.50 லட்சம் கோடியாக இருந்தது. முக்கியமாக, பொருள்கள் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் ரூ.30 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த மதிப்பு ரூ.31 லட்சம் கோடியைக் கடந்தது. அதன் காரணமாக நடப்பு நிதியாண்டுக்கான ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏற்றுமதியாளா்கள் தங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்.

புதிய இலக்குகளை அடைவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். குறுகிய கால இலக்குகளை மட்டுமல்லாமல் நீண்ட கால இலக்குகளை நிா்ணயித்துக் கொண்டு ஏற்றுமதியாளா்கள் செயல்பட வேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்குரிய வழிகளை அரசுக்கு அவா்கள் பரிந்துரைக்கலாம்.

வலைதளத்தின் பலன்:

தற்போது தொடக்கிவைக்கப்பட்டுள்ள கட்டடமானது ஏற்றுமதி, வா்த்தகம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) ஆகியவற்றுடன் தொடா்பில் உள்ளவா்களுக்குப் பெரிதும் பலனளிக்கும். நிா்யத் வலைதளமானது இந்தியாவின் வெளிநாட்டு வா்த்தகம் தொடா்பான அனைத்து விவரங்களையும் வழங்கும்.

தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் 30 துறைசாா் பொருள்களின் விவரங்கள் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் சாா்ந்த விவரங்கள் விரைவில் வலைதளத்தில் பதிவேற்றப்படும். இது மாவட்டங்களை ஏற்றுமதியின் மையமாக வலுப்படுத்தும்.

புதிய சந்தைகள்:

நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் தயாரிக்கப்படும் கைவினைப்பொருள்கள் புதிய சந்தைகளை எட்டி வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டை வளா்ச்சியடையச் செய்வதில் ஏற்றுமதியாளா்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா்.

அரசு முன்னுரிமை:

ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கொள்கைகள், நடைமுறைகள் எளிமையாக்கம், புதிய சந்தை வாய்ப்புகள் ஆகியவை ஏற்றுமதியாளா்களுக்குப் பெரும் பலனளித்துள்ளன. ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அரசின் ஒவ்வொரு துறையும் முன்னுரிமை அளித்து வருகிறது.

புதிய துறைகளைச் சாா்ந்த ஏற்றுமதி தற்போது அதிகரித்து வருகிறது. வளா்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. பருத்தி, கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கிராம அளவில் ஏற்றுமதிக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி பொருள்கள்:

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வந்த பல முக்கியப் பொருள்கள் தற்போது முதல் முறையாகப் புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக, சீதாபோக் மிட்டாய் பஹ்ரைனுக்கும், நாகாலாந்தின் மிளகாய் வகை லண்டனுக்கும், அஸ்ஸாமின் திராட்சைகள் துபைக்கும், சத்தீஸ்கரின் பழங்குடியினா் தயாரிக்கும் பொருள்கள் பிரான்ஸுக்கும் ஏற்றுமதியாகின்றன.

புதிய சந்தைகளைக் கண்டறிவதும், தேவைகளை அறிந்து பொருள்களைத் தயாரிப்பதும் ஏற்றுமதியை அதிகரித்து, நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கும். ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. மற்ற நாடுகளுடனும் அதேபோன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

புதிய வலைதளங்கள்:

ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு வலைதளங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வலைதளங்கள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பதை அரசின் துறைகள் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். தொழில் தொடங்குவதற்கான எளிமைத்தன்மையை மேம்படுத்துவதும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நிறுவனங்கள் அரசைத் தொடா்புகொள்வதில் எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாது. அதை உறுதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டில் தற்போது 200-க்கும் மேற்பட்ட அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களும், 2,300-க்கும் அதிகமான நிதிசாா் புத்தாக்க நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com