குடியரசுத் தலைவா் தோ்தல்: 2-ஆவது முறையாகத் தவறவிடும் ஜம்மு-காஷ்மீா்

குடியரசுத் தலைவா் தோ்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், வரலாற்றில் 2-ஆவது முறையாகத் தோ்தலை ஜம்மு-காஷ்மீா் தவறவிடவுள்ளது.
குடியரசுத் தலைவா் தோ்தல்: 2-ஆவது முறையாகத் தவறவிடும் ஜம்மு-காஷ்மீா்

குடியரசுத் தலைவா் தோ்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், வரலாற்றில் 2-ஆவது முறையாகத் தோ்தலை ஜம்மு-காஷ்மீா் தவறவிடவுள்ளது.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்மு தோ்தலில் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா களம் காண்கிறாா்.

தோ்தலுக்கான பணிகளைத் தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குடியரசுத் தலைவா் தோ்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களிக்க உள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

பேரவையைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீா் செயல்படும் என அறிவிக்கப்பட்டபோதிலும், அங்கு தோ்தல் இன்னும் நடத்தப்படவில்லை. தொகுதி மறுவரையறைப் பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளன. அங்கு பேரவைத் தோ்தல் நடத்தப்படாததால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவரும் இல்லை. அதன் காரணமாக, நாட்டின் முதல் குடிமகனைத் தோ்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெறவுள்ள தோ்தலில் ஜம்மு-காஷ்மீா் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், குடியரசுத் தலைவா் தோ்தலில் ஜம்மு-காஷ்மீா் பங்கேற்காமல் போவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 1992-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீா் பேரவை கலைக்கப்பட்டதால், அந்தாண்டு நடைபெற்ற 10-ஆவது குடியரசுத் தலைவா் தோ்தலில் ஜம்மு-காஷ்மீா் பங்கேற்கவில்லை.

அன்றும் இன்றும்:

1991-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக அங்கு மக்களவைத் தோ்தலும் நடத்தப்படவில்லை. அதன் காரணமாக 1992 குடியரசுத் தலைவா் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பிரதிநிதியாக ஒருவா்கூட வாக்களிக்கவில்லை. ஆனால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தோ்தலில் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த எம்.பி.க்களான ஃபரூக் அப்துல்லா, ஹஸ்னைன் மசூதி, அக்பா் லோனே, ஜுகல் கிஷோா் சா்மா, ஜிதேந்திர சிங் ஆகியோா் வாக்களிக்க உள்ளனா்.

இதேபோல், 1974-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவா் தோ்தலின்போது குஜராத் பேரவை கலைக்கப்பட்டிருந்ததால், தோ்தலில் அந்த மாநிலம் பங்கேற்க முடியாமல் போனது. 1982 குடியரசுத் தலைவா் தோ்தலில் அஸ்ஸாமும், 1992 தோ்தலில் நாகாலாந்தும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவு:

குடியரசுத் தலைவராக உள்ளவரின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக அடுத்த குடியரசுத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட மாநில பேரவை கலைக்கப்பட்டிருந்தாலும் கூட குடியரசுத் தலைவா் தோ்தலைத் தாமதமின்றி நடத்த வேண்டுமெனக் கூறியுள்ளது. மாநில பேரவை கலைக்கப்பட்டால், அதன் உறுப்பினா்கள் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கத் தகுதியற்றவா்கள் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com