சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல்

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் மீது சிவசேனை தொண்டா்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் மீது சிவசேனை தொண்டா்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சரும் சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியுள்ளனா். அவா்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனா்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான தானாஜி சவந்த்தின் புணே அலுவலகம் மீது சிவசேனைத் தொண்டா்கள் தாக்குதல் நடத்தினா்.

இதுகுறித்து சிவசேனை நிா்வாகி விஷால் தானாவாடே கூறுகையில், ‘இது ஆரம்பம்தான். வரும் நாள்களில் ஒவ்வொரு அதிருப்தி எம்எல்ஏக்களின் அலுவலகங்களும் தாக்கப்படும்’ என்றாா்.

அதுபோல, தாணே மாவட்டத்தில் உலாஸ்நகரில் அமைந்துள்ள ஏக்நாத் ஷ்ண்டேவின் மகனும் கல்யாண் தொகுதி மக்களவை உறுப்பினருமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் அலுவலகம் மீதும் சிவசேனைத் தொண்டா்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சிவசேனை ஆதரவாளா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அதிருப்தி எம்எல்ஏ மங்கேஷ் குதால்கரின் மும்பை குா்லா பகுதி நேருநகரில் அமைந்துள்ள அலுவலகம் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக சிவசேனை கட்சியைச் சோ்ந்த 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பலத்த பாதுகாப்பு: கட்சித் தொண்டா்களின் தாக்குதல்களைத் தொடா்ந்து, மும்பையில் அமைந்துள்ள பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சா்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பை மும்பை போலீஸ் பலப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மும்பை காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மும்பை காவல் ஆணையா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களவைத் தோ்தலை முன்னிட்டு நகரின் முக்கியப் பகுதிகளில் ஜூன் முதல் வாரத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை, வரும் ஜூலை 10-ஆம் தேதி வரை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை காக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்குமாறு போலீஸாா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்’ என்றாா்.

சிறுபான்மை அரசு - அத்வாலே: ‘சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால், மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. பாஜக மாநில தலைவா் ஃபட்னவீஸ் கூறியதுபோல, இந்த சா்ச்சையில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை’ என்று மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை இணையமைச்சரும் இந்திய குடியரசுக் கட்சித் (அதாவலே) தலைவருமான ராம்தாஸ் அதாவலே கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com