லட்சத்தீவு: மீன் ஏற்றுமதியில் ஊழல்?: சிபிஐ விசாரணை

லட்சத்தீவில் இருந்து இலங்கையில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு சூரை மீன் ஏற்றுமதி செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல்

லட்சத்தீவில் இருந்து இலங்கையில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு சூரை மீன் ஏற்றுமதி செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதன் மீது சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா்.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (எல்சிஎம்எஃப்), பொதுப்பணித் துறை, காதி வாரிய கூட்டுறவுச் சங்கம், கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை ஆகியவற்றில் அடுத்தடுத்து ஊழல் அரங்கேறியதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.

லட்சத்தீவு மீனவா்களிடமிருந்து சூரை மீன்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு வாயிலாக இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள அப்துல் ரஸாக் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆனால் அந்த நிறுவனம் இதுவரை அதற்கான பணத்தைக் கொடுக்கவில்லை என்றும் இதனால் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்புக்கும், உள்ளூா் மீனவா்களுக்கும் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில் இந்த வா்த்தகத்தின் மூலம் லட்சத்தீவு மக்கள் பிரதிநிதிகளும், அரசு ஊழியா்களும் ஊழல் புரிந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது ஃபைசலுக்கும் தொடா்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், 25 சிபிஐ அதிகாரிகள் அண்மையில் லட்சத்தீவு சென்று சில குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு துறையிலும் சோதனை நடத்தினா். மீனவா்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளில் மீன்வளத் துறை அதிகாரிகள் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், மீன்வளத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினா்.

லட்சத்தீவு கட்டட மேம்பாட்டு வாரியத்தால் ஏழைகளுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகளில் 70 சதவீதத்தை அரசு அதிகாரிகளே ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக பொதுப் பணித் துறை அலுவலகத்தில் சிபிஐயின் ஒரு குழுவினா் சோதனை நடத்தி, ஆவணங்களைக் கைப்பற்றினா்.

இதேபோல சில அரசியல்வாதிகள் கடன் மோசடி செய்ததாக காதி வாரிய கூட்டுறவு சங்கத்திலும், தரக்குறைவான மருந்துகளைக் கொள்முதல் செய்ததாக எழுந்த புகாரின்பேரில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், துறைவாரியாக தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com