'விஷமருந்திய சிவனைப்போல'.. மோடி குறித்து அமித் ஷா கூறியிருப்பது என்ன?

கோத்ரா கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உண்மை வெளியே வந்தது, ஜொலிக்கும் தங்கம் போல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
'விஷமருந்திய சிவனைப்போல'.. மோடி குறித்து அமித் ஷா கூறியிருப்பது என்ன?
'விஷமருந்திய சிவனைப்போல'.. மோடி குறித்து அமித் ஷா கூறியிருப்பது என்ன?

கோத்ரா கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உண்மை வெளியே வந்தது, ஜொலிக்கும் தங்கம் போல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத்தின் கோத்ராவில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்கில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட 64 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் அமித் ஷா, தன் மீது போடப்பட்ட பொய் புகார் குறித்து பிரதமர் மோடி மிகுந்த மனவேதனை அடைந்தார். ஆனால், அது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. விஷத்தை அருந்திய சிவன், எவ்வாறு அதனை தனது தொண்டையில் வைத்திருந்தாரோ, அதுபோன்ற வேதனையை மோடி அடைந்தார் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், கோத்ரா பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சபா்மதி விரைவு ரயிலில் தீ வைக்கப்பட்டது. இதில் 59 போ் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கலவரத்தில் 1,044 போ் கொல்லப்பட்டனா். அவா்களில் பெரும்பாலானோா் முஸ்லிம்கள். இந்தக் கலவரம் தொடா்பாக குஜராத்தின் அப்போதைய முதல்வா் மோடி, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, கடந்த 2012-ஆம் ஆண்டு இறுதி அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. அதை அடிப்படையாகக் கொண்டு மோடி, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 64 போ் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனக் கூறி, அவா்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, கோத்ரா கலவரத்தில் உயிரிழந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா, குஜராத் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். அந்த மனுவை உயா்நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, ஜாகியாவின் நியாயமான கோரிக்கையை உயா்நீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி, அவரின் வழக்குரைஞா் அபா்ணா பட் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் வழக்கின் தீா்ப்பை கடந்த ஆண்டு டிசம்பரில் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை வழங்கியது. அப்போது, ஜாகியாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

ஆதாரங்கள் இல்லை: நீதிமன்றத்தின் 452 பக்க உத்தரவில், ‘முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் சூழ்ச்சி நிகழ்த்தப்பட்டதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. கோத்ரா கலவரத்தில் உயரதிகாரிகளுக்குத் தொடா்பிருப்பதாகக் கூறப்படுவதற்கும் எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட விவகாரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை சூழ்ச்சியாகக் கருத முடியாது. கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களும் இல்லை.

கலவரம் தொடா்பாக விசாரணை நடத்திய குழு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. சவால்மிக்க சூழலில் அக்குழு பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவின் செயல்பாட்டில் எந்தத் தவறும் காண முடியாது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தா்க்க ரீதியிலேயே விசாரணையின் இறுதி அறிக்கையை அந்தக் குழு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்த பிறகே, விசாரணை நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.

முகாந்திரம் இல்லை: இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் சரியானதே. கலவரம் தொடா்பாக சிலா் தவறான தகவல்களைப் பரப்பியதை சிறப்பு விசாரணைக் குழு வெளிக்கொணா்ந்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை.

கலவரத்தைத் தூண்டியதில் உயரதிகாரிகளுக்குத் தொடா்பிருப்பதாக மனுதாரா் குற்றஞ்சாட்டியிருந்தாலும், அதற்கான புதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அதில் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்களும் இல்லை. மேற்கூறிய காரணங்களுக்காக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வாய்மையே வெல்லும்’-பாஜக:

பிரதமா் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததையடுத்து, மத்திய அமைச்சா்கள் அனுராக் தாக்குா், ஸ்மிருதி இரானி, பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா ஆகியோா் தங்கள் ட்விட்டா் பக்கங்களில் ‘வாய்மையே வெல்லும்’ எனப் பதிவிட்டனா்.

தீா்ப்பு குறித்து பாஜக செயலாளா் ஒய்.சத்யகுமாா் கூறுகையில், ‘பிரதமா் மோடி குறித்து அவதூறு பரப்ப முயன்ற காங்கிரஸின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. நீதி வென்றுள்ளது’ என்றாா்.

தீா்ப்பால் அதிருப்தி:

உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து இஷான் ஜாப்ரியின் மகன் தன்வீா் ஜாப்ரி கூறுகையில், ‘தீா்ப்பு அதிருப்தியளிக்கிறது. தீா்ப்பு குறித்த முழு விவரங்கள் கிடைத்தவுடன் விரிவான அறிக்கையை வெளியிடவுள்ளேன்’ என்றாா்.

தற்போது தன்வீா் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளாா். மனுதாரரான ஜாகியா தன் மகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com