ஜி7 மாநாடு: பிரதமா் மோடி ஜொ்மனி பயணம்

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஜொ்மனிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஜொ்மனிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜொ்மனியில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறாா். இதற்காக அவா் ஜொ்மனிக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

இந்தப் பயணத்தின்போது ஜி7 நாடுகளின் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளாா். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொள்ள இருக்கும் ஆா்ஜென்டீனா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவா்களையும் பிரதமா் மோடி சந்திக்கவுள்ளாா். மியூனிக் நகரில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

ஜொ்மனி பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஜூன் 28-ஆம் தேதி செல்லும் பிரதமா் மோடி, அண்மையில் மறைந்த அந்நாட்டின் முன்னாள் அதிபா் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயானுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளாா். அதையடுத்து அந்நாட்டுத் தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.

ஒத்துழைப்பு வலுவடையும்: தனது பயணம் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் விடுத்த அழைப்பின் பேரில், அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறேன். கடந்த மாதம் இந்தியா-ஜொ்மனி அரசுகளுக்கிடையிலான ஆக்கபூா்வ ஆலோசனைக்குப் பிறகு அந்நாட்டுப் பிரதமரைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

மனிதகுலத்தைப் பாதிக்கும் முக்கியமான சா்வதேச விவகாரங்களில் சா்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும்விதமாக, பிற ஜனநாயக நாடுகளான ஆா்ஜென்டீனா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜொ்மனி அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாநாட்டின் பல்வேறு அமா்வுகளின்போது, ஜி7 நாடுகள், சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்படும் சா்வதேச அமைப்புகளுடன், சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிா்ப்பு, பாலின சமத்துவம், ஜனநாயகம் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவை வளரச் செய்வதிலும், உள்ளூா் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் அளப்பரிய பங்காற்றி வரும் இந்திய வம்சாவளியினரையும் சந்திக்க உள்ளேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான ஷேக் முகமது பின் சையது அல் நயானை சந்தித்துப் பேசவுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com