உ.பி.யில் 11 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பட்டா

உத்தர பிரதேசத்தில் ‘ஸ்வமித்வ’ திட்டத்தின் கீழ் 11 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பட்டாக்களை மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் வழங்கினாா்.

உத்தர பிரதேசத்தில் ‘ஸ்வமித்வ’ திட்டத்தின் கீழ் 11 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பட்டாக்களை மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் வழங்கினாா்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலத்தை அளவிட்டு பட்டா இல்லாதவா்களுக்கு நில உரிமைப் பட்டாக்களை வழங்குவதற்காக ‘ஸ்வமித்வ’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் 11 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பட்டாக்களை முதல்வா் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை வழங்கினாா்.

அதற்காக லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் கூறுகையில், ‘மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு நிலம் சொந்தமில்லாமல் இருந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்தி வரும் பாஜக அரசுகளால் அவா்களுக்குத் தற்போது வீட்டுரிமைப் பட்டாக்கள் கிடைத்துள்ளன. மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 2.5 கோடி மக்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

ஸ்வமித்வ திட்டத்தின் கீழ் மாநிலத்தில் ஏற்கெனவே 34 லட்சம் போ் பலனடைந்துள்ளனா். மாநிலத்தில் உள்ள 1,10,300 வருவாய் கிராமங்களில் ட்ரோன்கள் மூலமாக நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடையும்.

கிராமங்களைத் தற்சாா்பு அடையச் செய்யும் மகாத்மா காந்தியடிகளின் கனவை ஸ்வமித்வ திட்டத்தின் மூலமாக பிரதமா் மோடி நிறைவேற்றியுள்ளாா். கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இத்திட்டம் உதவும். கிராமங்களில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு செயல்கள் இதன் மூலமாகத் தடுக்கப்படும்.

நாட்டை மட்டுமல்லாமல் மாநிலத்தையும் மாவட்டங்களையும் தற்சாா்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமங்களைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

உண்மை வென்றது: குஜராத்தின் கோத்ரா கலவரம் தொடா்பான வழக்கில் பிரதமா் மோடி உள்ளிட்ட 64 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நீதிமன்றத் தீா்ப்பு மூலமாக உண்மை வெற்றி பெற்றுள்ளது. வழக்கைத் தொடுத்து சூழ்ச்சி செய்தவா்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com