இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் உறுதி

ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயானை சந்தித்துப் பேசினார். இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த தலைவர்கள் உறுதியேற்றனர்.
இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் உறுதி

ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயானை சந்தித்துப் பேசினார். இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த தலைவர்கள் உறுதியேற்றனர்.
 ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பிரதமர் மோடியை அபுதாபி விமான நிலையத்துக்கு நேரடியாகச் சென்று அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயான் வரவேற்றார். ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களும் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றனர்.
 அதிபர் ஷேக் முகமதை சகோதரர் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். அதையடுத்து அதிபர் ஷேக் முகமதை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
 அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயானின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். ஷேக் கலீஃபா தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர் எனப் பாராட்டிய பிரதமர் மோடி, அவரது தலைமையின் கீழ் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவு வளர்ச்சியை அடைந்ததாகத் தெரிவித்தார்.
 ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனரும் முதல் அதிபருமான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நயானின் மூத்த மகனே ஷேக் கலீஃபா ஆவார். அவர் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த மாதம் 13-ஆம் தேதி 73 வயதில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
 அவரது மறைவுக்குப் பிறகு புதிய அதிபராக ஷேக் முகமது பொறுப்பேற்றார். சந்திப்பின்போது பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் விவாதித்ததாக வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அந்நாட்டு அதிபருக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவுக்குக் கூடிய விரைவில் வருகை தர வேண்டுமெனவும் அதிபர் ஷேக் முகமதுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
 சீனா, அமெரிக்காவுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் 3-ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. அந்நாட்டில் சுமார் 34 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மக்கள்தொகையில் சுமார் 35 சதவீதம் ஆகும். அந்நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் சயீத்' விருது பிரதமர் மோடிக்குக் கடந்த 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
 இந்தியா வருகை: ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு தாயகம் திரும்பினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கிளம்பும்போது அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பிரதமர் மோடியை வழியனுப்பிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com