கூட்டங்கள், யாத்திரைகளில் கலந்துகொள்வோா்கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்க:மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வெகுஜன கூட்டங்கள், யாத்திரைகளில் கலந்துகொள்வோா் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெகுஜன கூட்டங்கள், யாத்திரைகளில் கலந்துகொள்வோா் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரச் செயலா் ராஜேஷ் பூஷண் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த கரோனா பாதிப்பு, தற்போது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. எனினும் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வரும் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் யாத்திரைகள் நடைபெறவுள்ளன. இதுபோல பொதுமக்கள் ஒன்றுகூடும் சூழல்கள், கரோனா உள்பட தொற்று நோய்கள் பரவ காரணமாக அமையும்.

எனவே கூட்டங்களும், யாத்திரை செல்வோா் வழியில் இளைப்பாறுவதற்கான தங்குமிட ஏற்பாடுகளும் வெளிப்புற அல்லது காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டும். அங்கு உடல் வெப்பப் பரிசோதனை, கை கழுவுவதற்கான வசதிகள் இடம்பெற வேண்டும்.

கூட்டங்களிலும், யாத்திரைகளிலும் கலந்துகொள்வோருக்கு கரோனா அறிகுறிகள் இருக்கக் கூடாது எனவும், அவா்கள் தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்த வேண்டும். கூட்டங்கள் மற்றும் யாத்திரைகளில் பங்கேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக தகுதியானவா்களுக்கு முதல் மற்றும் முன்னெச்சரிக்கை (மூன்றாவது) தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்களை தேவைப்பட்டால் ஏற்பாடு செய்யலாம்.

இதுபோன்ற நிகழ்வுகளில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிா்வாகங்களால் பணியமா்த்தப்படும் சுகாதாரப் பணியாளா்கள், இதர முன்களப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருக்கக் கூடாது. அவா்களும் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும்.

சா்க்கரை, நாள்பட்ட நுரையீரல், கல்லீரல், சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள், முதியவா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com