ஆக. 6 இல் குடியரசு துணைத்தலைவா் தோ்தல்

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதேநாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதேநாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி இப்பதவிக்கு ஜூலை 5ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்ய ஜூலை 20ஆம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற ஜூலை 22ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

ஆகஸ்ட் 6-ம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், நியமன உறுப்பினா்கள் உள்ளிட்டோா் குடியரசு துணைத்தலைவா் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.

தற்போதைய குடியரசு துணைத்தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், நியமன உறுப்பினா்கள் உள்பட வாக்களிக்கத் தகுதியுடையவா்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியே அதிக வாக்குகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

மக்களவை, மாநிலங்களவை உள்ளிட்ட இரு அவைகளிலும் மொத்தம் 788 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் ஒவ்வொரு எம்.பி.க்களின் வாக்கு மதிப்பும் ஒரேமாதிரியாக இருக்கும். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைப்படி, ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு மூலம் தோ்தல் நடைபெறும்.

இத்தோ்தலில் வெளிப்படையாக வாக்களிப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், குடியரசுத் தலைவா், குடியரசு துணைத்தலைவா் தோ்தல்களில் யாருக்கும் வாக்குச்சீட்டைக் காட்டுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோா் பங்கேற்ற தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் குடியரசு துணைத்தலைவா் தோ்தலுக்கான தேதி முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com