நாட்டை தற்சார்புடையதாக மாற்ற தொழில்நுட்பங்கள் முக்கியத் தேவை

நாட்டை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் மிக முக்கியத் தேவை. இதன்மூலமே மக்கள் அதிகாரத்தை பெறுவார்கள். நிதி நிலை அறிக்கையில் இந்தக் கண்ணோட்டம் பிரதிபலித்துள்ளது என்று
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
நரேந்திர மோடி (கோப்புப் படம்)

நாட்டை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் மிக முக்கியத் தேவை. இதன்மூலமே மக்கள் அதிகாரத்தை பெறுவார்கள். நிதி நிலை அறிக்கையில் இந்தக் கண்ணோட்டம் பிரதிபலித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை முழுமையாக அமலாக்கவும்,  தொடர்பானவர்களை ஊக்கப்படுத்தவும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய 7-ஆவது கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. 
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் சார்பில் நடைபெற்ற இந்த மெய்நிகர் வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பேசியதாவது:
மத்திய அரசில் அறிவியல் தொழில்நுட்பத் துறை தனிமைப்படுத்தப்படவில்லை. பொருளாதாரத் துறையில் டிஜிட்டல் பொருளாதாரம், மென்பொருள் - நிதி சேவைகளும் (ஃபின்டெக்) இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல அடிப்படைக் கட்டமைப்பு,  சேவைத் துறை ஆகியவற்றில் மேம்பட்ட நவீன தொழில்நுட்பம் மிகப் பெரும் பங்கை வகிக்கிறது. நாட்டு மக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பம் ஒரு வழியாக இருக்கிறது. குறிப்பாக தற்சார்பு இந்தியாவாக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. புதிய உலக நடைமுறையில், தற்சார்புடன் முன்னேறுவது முக்கியமானது.
இதை முன்னிட்டு "சன்ரைஸ்" துறைகள் என்று கூறப்படும் எதிர்காலத்தில் சிறப்பாக வளரும்துறைகளான செயற்கை நுண்ணறிவு, புவிசார் தரவுகளுக்கான நடைமுறைகள், ட்ரோன்கள், செமிகண்டக்டர்கள், விண்வெளி தொழில்நுட்பம், மரபணு ஆய்வு, மருந்து தயாரிப்பு, பசுமை எரிசக்தி முதல் 5 ஜி உள்ளிட்டவற்றில் முதலீடுகளை அதிரிக்கவும், ஆராய்ச்சி, மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வலுவான 5ஜி தொழில்நுட்ப செயல்முறையுடன் தொடர்புடைய ஒருங்கிணைந்த உற்பத்திக்கான உத்தேசங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம், உற்பத்தியுடன் இணைந்து ஊக்க (பிஎல்ஐ) திட்டங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் துறையில் தனியார் துறையினர் தங்களின் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.
"அறிவியல் உலகளாவியது, தொழில்நுட்பம் உள்நாட்டுக்கானது', இந்த அறிவியலின் கோட்பாடுகளை நாம் அறிந்துள்ளோம். வாழ்க்கையை எளிதாக்கக்கூடிய தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்துவதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீடு கட்டுமானம், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிப்பாதைகள், கண்ணாடி இழை, இ-கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கான முதலீடு குறித்தும், இந்த முக்கியமான துறைகளில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டம் யோசனை வழங்க வேண்டும்.
தகவல் தொடர்பு மையங்கள், நிதி சேவைகளுக்கான மென்பொருள் (ஃபின்டெக்) மையத்தன்மை போன்றவற்றுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைப்பதுடன்,  உள்நாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும். தற்சார்பு மூலம் கரோனா தடுப்பூசி தயாரிப்பு உள்ளிட்டவற்றில்  நம் மீது உலக நாடுகள் நம்பகத் தன்மை கொண்டுள்ளன. அனைத்துத் துறையிலும் இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டியுள்ளது. மூன்றாவது பெரிய புதுயுகத் தொழில்முனைவோர் சூழ்நிலை இந்தியாவில் நடைமுறையில் உள்ள நிலையில், இளைஞர்களுக்கு திறன் வழங்குதல், மறுதிறன் அளித்தல், திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான பல திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன் நம்பகமான திறன், ஆதாரங்கள், பணம் செலுத்துதல், கண்டுபிடிப்பு படிநிலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஏபிஐ செயலி மூலம் இளைஞர்கள் சரியான வேலைகளையும், வாய்ப்புகளையும் பெறுவார்கள் என்றார் பிரதமர் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com