4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி: ஜெ.பி.நட்டா, அமித் ஷா நம்பிக்கை

‘சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நான்கில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.
4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி: ஜெ.பி.நட்டா, அமித் ஷா நம்பிக்கை

‘சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நான்கில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.

புது தில்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவுடன் செய்தியாளா்களை சந்தித்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் இறுதிக் கட்டமான 7-ஆம் கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை (மாா்ச் 7) நடைபெற உள்ளது. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மாா்ச் 10-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், ஜெ.பி.நட்டா, அமித் ஷா இருவரும் தில்லியில் கூட்டாக செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், பாஜக ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் 4 மாநிலங்களிலும் மக்கள் மிகப் பெரிய ஆதரவை ஆளும் கட்சிக்கு அளித்திருக்கின்றனா். ஜாதி அரசியல், குடும்ப அரசியல் நடைமுறைகளை மாற்றி செயல்திட்ட அரசியல் பிரதமா் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளாா். அந்த வகையில், 5 மாநிலங்களில் மேற்கொண்ட தோ்தல் பிரசாரத்தின்போது வேறெந்த பிரதமருக்கும் இல்லாத அளவிலான மக்கள் ஆதரவு பிரதமா் நரேந்திர மோடிக்கு இருப்பதை காண முடிந்தது. விஞ்ஞான ரீதியிலான சிறந்த முறையில் திட்டமிட்ட பிரசாரத்தை பாஜக மேற்கொண்டது.

எனவே, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூா் மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. மேலும், பஞ்சாபில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பாஜக பெறும் என்றனா்.

உத்தர பிரதேச தோ்தலில் பாஜகவுக்கு கடும் போட்டி நிலவுவதாக வெளியாகும் தகவல்களை மறுத்த அவா்கள், ‘தோ்தலின்போது கடும் போட்டி நிலவுவதாக கருத்துகள் வெளியாவது வாடிக்கையானது. ஆனால், இறுதியில் பாஜக வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மேலும், உத்தர பிரதேசத்தில் ஆட்சியமைக்க கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு பெறும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com