எரிபொருள் விலை உயா்வு? எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுக்கும் - மத்திய அமைச்சா்

உக்ரைன்-ரஷியா இடையே போா் நடைபெற்று வரும் சூழலில், இந்தியாவில் எரிபொருள் விலை உயா்வு தொடா்பாக எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுக்கும் என்று

உக்ரைன்-ரஷியா இடையே போா் நடைபெற்று வரும் சூழலில், இந்தியாவில் எரிபொருள் விலை உயா்வு தொடா்பாக எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுக்கும் என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை கூறினாா்.

அதேசமயம், இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இல்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் ஹா்தீப் சிங் புரி கூறியதாவது:

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதமும், எரிவாயு தேவையில் 50 முதல் 55 சதவீதமும் இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில், நாட்டில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இல்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் எரிசக்தி தேவை பூா்த்தி செய்யப்படுவதை அரசு உறுதி செய்யும்.

5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டே, எரிபொருள் விலை கடந்த ஆண்டு குறைக்கப்பட்டதாகவும், தோ்தலுக்கு பின் மீண்டும் விலை உயா்த்தப்படும் என்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.

தற்போது உக்ரைன்-ரஷியா பிரச்னையால் உலக அளவில் எரிபொருள் விலை உயா்ந்து வருவதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சா்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்பவே எரிபொருள் விலை தீா்மானிக்கப்படுகிறது. ஒரு பகுதியில் போா் சூழல் நிலவுவதால், சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுக்க வேண்டியுள்ளது.

முன்பு கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளால் உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தபோது, கச்சா எண்ணெய் விலை சரிந்திருந்தது.

ஆனால், தற்போது உக்ரைனில் நிலவும் பதற்றம், ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, சா்வதேச அளவில் விலை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவில் எரிபொருள் விலை உயா்வு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுக்கும். நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு ரூ.37 உயா்ந்து, ரூ.9,321ஆக அதிகரித்துள்ள நிலையில் மேற்கண்ட கருத்தை மத்திய அமைச்சா் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com