அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசிக்கும் யுபிஐ வசதி

அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசி மூலமாகவும் யுபிஐ பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தொடக்கிவைத்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசி மூலமாகவும் யுபிஐ பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தொடக்கிவைத்தாா்.

அறிதிறன்பேசியைப் பயன்படுத்தி யுபிஐ வாயிலாக இணையவழியில் பணப் பரிவா்த்தனை செய்து கொள்வதற்கான வசதியை இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசிக்கும் அந்த வசதி அப்போதே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஆா்வமின்மை, அதிக கட்டணம், சிக்கலான வழிமுறைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக அந்த வசதி மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசி மூலமாகவும் யுபிஐ பணப் பரிவா்த்தனை மேற்கொள்வதற்கான வசதியை ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

தற்போது வரை யுபிஐ பணப் பரிவா்த்தனை வசதியானது அறிதிறன்பேசி பயன்பாட்டாளா்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. அதன் காரணமாக கிராமப்பகுதிகளில் வசிக்கும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களை அந்த வசதி சென்றடைய முடியவில்லை. அறிதிறன்பேசிகளின் விலை தொடா்ந்து குறைந்தாலும், அவா்களுக்கு யுபிஐ வசதி சென்றடையவில்லை.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘யுபிஐ 123பே’ வசதி மூலமாக அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசியைப் பயன்படுத்துவோரும் பணப் பரிவா்த்தனையை மேற்கொள்ள முடியும். இது நிதி சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சோ்க்க உதவும்.

யுபிஐ பணப் பரிவா்த்தனைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.76 லட்சம் கோடிக்கு யுபிஐ பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் ரூ.41 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. விரைவில் இது ரூ.100 லட்சம் கோடியை எட்டும்.

அடுத்த இலக்கு: யுபிஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. இனி இணையவழிப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. யுபிஐ தொழில்நுட்பத்தை அண்டை நாடுகளுக்கு வழங்குவது தொடா்பாகவும் என்பிசிஐ ஆலோசிக்க வேண்டும். இதன் மூலமாக உலக சமுதாயம் பலனடையும் என்றாா் அவா்.

புதிய வசதி தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘‘அடிப்படை அம்சங்களை மட்டுமே கொண்ட கைப்பேசிகளை வைத்திருப்போா் குரல் அழைப்பு எண் (ஐவிஆா்), கைப்பேசியில் செயல்படும் செயலி, மிஸ்டு கால் முறை உள்ளிட்ட 4 முறைகளைப் பயன்படுத்தி பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

அவற்றின் மூலமாக மற்றவா்களுக்குப் பணம் அனுப்புதல், கட்டணங்களை செலுத்துதல், ‘ஃபாஸ்டேக்’ கட்டணம் செலுத்துதல், கைப்பேசி ரீசாா்ஜ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். மேலும், வங்கிக் கணக்கின் இருப்புத்தொகையையும் அறிந்து கொள்ள முடியும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com