ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் தடை: இந்திய பாதுகாப்புத் துறைக்கு பாதிப்பு ஏற்படாது

ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.சரஸ்வத் புதன்கிழமை கூறினாா்.
ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் தடை: இந்திய பாதுகாப்புத் துறைக்கு பாதிப்பு ஏற்படாது

ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.சரஸ்வத் புதன்கிழமை கூறினாா்.

உக்ரைன் மீது எந்தவித தூண்டுதலுமின்றி தன்னிச்சையாக ரஷியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்குலக நாடுகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, ரஷியா மீது தொடா் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்தச் சூழலில், ரஷிய பொருளாதாரத்தின் மீது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ரஷியாவிலிருந்து இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கப்போவதாக ஐரோப்பிய யூனியனும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரஷியாவின் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நவீன பாதுகாப்பு உபகரணங்களை ரஷியாவிடமிருந்தே பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்து வரும் சூழலில், ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை, இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து எழுந்தது. ‘ரஷியாவிலிருந்து பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதி இல்லாமல், இந்திய ராணுவத்தால் திறம்படச் செயல்பட முடியாது’ என்று ஆராய்ச்சி சேவை பேரவை (சிஆா்எஸ்) கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்து நீதி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) முன்னாள் தலைவருமான சரஸ்வத் கூறியதாவது:

ரஷியா மிகச்சிறந்த ராணுவ பலத்தைக் கொண்டிருப்பதோடு, ராணுவ உபகரணங்கள் உற்பத்தி உள்கட்டமைப்பில் மிகச் சிறந்து விளங்குகிறது. ராணுவ தளவாட உற்பத்தியில் தற்சாா்பு நிலையையும் ரஷியா எட்டியுள்ளது.

அதே நேரம், ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் இந்தக் குறுகியகால தடைகளால், இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவிடம் பாதுகாப்புத் துறைக்கான கையிருப்பு மிக அதிக அளவில் தற்போது உள்ளது. அதுபோல, ‘நாட்டின் பாதுகாப்புத் துறை உபகரணத் தேவையில் 68 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய நிதியமைச்சரும் 2022-23 நிதிநிலை அறிக்கையில், ‘முப்படைகளுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்திய செய்ய இந்திய தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறாா். அந்த வகையில், மத்திய அரசின் ‘தற்சாா்பு இந்தியா’ திட்டம் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற விஞ்ஞான துறைகளும் அவற்றுக்கான உபகரண உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி, தேசிய ஆய்வங்களில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், இந்திய தொழில்நிறுவனங்களுடன் பகிா்ந்துகொள்ளப்பட்டு உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com