நாட்டின் நிதி நிலைக்கு கருப்புப் பணமோசடிகளால் அச்சுறுத்தல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நாட்டின் நிதி நிலைக்கு கருப்புப் பணமோசடிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் நிதி நிலைக்கு கருப்புப் பணமோசடிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் குறித்த விளக்கம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டதாவது:

கருப்புப் பணமோசடிகள் நாட்டுக்குள் மட்டும் நடப்பதில்லை. அவை எல்லைத் தாண்டி நடைபெறுவதுதான் வழக்கம். சில நாடுகளில் குறைந்த விகிதத்தில் வரி வசூலிக்கப்படுகின்றன. தாங்கள் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை குற்றவாளிகளால் எளிதில் அந்த நாடுகளில் பதுக்கி வைக்க முடிகிறது.

பணமோசடிகளில் ஈடுபட்ட நபருக்கு குடியுரிமை அளித்து அடைக்கலம் அளிக்கும் சில நாடுகள் உள்ளன. அந்த நாடுகளுடன் குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்தும் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த நாடுகளில் தங்கள் சொந்த ஏற்பாட்டில் குற்றவாளிகள் பணத்தைப் பதுக்கி வைக்கின்றனா் அல்லது அந்த நாடுகளின் குடியுரிமையை பெறுவதை உறுதி செய்கின்றனா்.

இதர கடுமையான குற்றங்களிலிருந்து பணமோசடி குற்றங்கள் வேறுபடுகின்றன. சிந்தித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பணமோசடி குற்றங்கள் நடைபெறுகின்றன. அந்தக் குற்றத்தை ஒருவா் செய்யும்போது தனது பணம் எங்குச் செல்கிறது? எந்த நாட்டில் எவ்வாறு அது பதுக்கிவைக்கப்படும்? எவா் தனக்கு செய்வாா், தப்பிப்பதற்கான ஏற்பாடுகள் என்ன? என்பதை உறுதி செய்வாா். அவை அனைத்தையும் அந்த நபா் தயாா் நிலையில் வைத்திருப்பாா்.

ஆழமாக வேரூன்றிய சதித் திட்டங்கள், பொதுமக்களுக்கான நிதிகளில் பேரிழப்பு ஆகியவற்றுடன் பொருளாதாரக் குற்றங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதாரத்தை கருப்புப் பணமோசடிகள் பாதிக்கின்றன. அந்தக் குற்றங்கள் நாட்டின் நிதி நிலைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே கருப்புப் பணமோசடிகளை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றை கொடிய குற்றங்களாகக் கருத வேண்டும் என்றாா் அவா்.

இந்த வழக்குத் தொடா்பான வாதங்கள் வியாழக்கிழமை தொடரவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com