சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு: ரஷிய-உக்ரைன் போர் காரணமா?

ரஷிய - உக்ரைன் போர் காரணமாக, இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி சமையல் எண்ணெய் விலை ஏற்கனவே 25 - 30 சதவீதம் உயர்ந்துவிட்ட நிலையில், அதுமேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ரஷிய - உக்ரைன் போர் காரணமாக, இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி சமையல் எண்ணெய் விலை ஏற்கனவே 25 - 30 சதவீதம் உயர்ந்துவிட்ட நிலையில், அதுமேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.


ஒரு பக்கம் நாட்டிலுள்ள சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு ஆலைகளில், இருப்பு வைக்கப்பட்டிருக்கும் சூரியகாந்தி எண்ணெய் குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூரியகாந்தி எண்ணெய் பல்வேறு துறைமுகங்களிலும் சிக்கியுள்ளது.

இதன் காரணமாகத்தான் தற்போது நாட்டில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, இல்லத்தரசிகளின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு காரணமாக, இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியை பாதிக்கச் செய்துள்ளது. காரணம், நாட்டின் ஒட்டமொத்த சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில், கருங்கடலில் அமைந்திருக்கும் உக்ரைன் மற்றும் ரஷிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு 90 சதவீதம் என்பதே.

ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் ஒரு கிலோ சூரியகாந்தி சமையல் எண்ணெய் விலை ரூ.135 ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. உக்ரைன், ரஷியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய காந்தி எண்ணெய்க்கு மாற்றாக, மத்திய அரசு வேறு நாடுகளிலிருந்து சமையல் எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கும்வரை, நாட்டு மக்கள், சூரியகாந்தி எண்ணெய் அல்லாத வேறு சமையல் எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் அச்சப்பட வேண்டுமா?
சூரிய காந்தி எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் பலவும் தற்போதே சூரியகாந்தி வித்துக்கள் இல்லாமல் தவித்து வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் இன்னும் ஒரு மாதம் வரை இருக்கும் கச்சா பொருளை வைத்து எண்ணெய் தயாரிப்புப் பணியை தொடர முடியும்.

இதனால், பெரிய அளவில் எண்ணெய் விநியோகத்தை நிறுத்திவிட்டு, சில்லறை வணிகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கவும் பெரிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்திய சமையலறைகளில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயில், பத்தில் ஒரு மடங்கு சூரியகாந்தி எண்ணெய்தான். அதுவும் குறிப்பாக வடக்கு மாநிலங்களை விடவும், தென் மாவட்டங்களில் இது அதிகம்.

எப்படியிருந்தாலும், சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி தடைபட்டிருப்பது, நாட்டு மக்களுக்கு சிரமத்தை அளித்தாலும், அதனுடன், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் என பல வகை எண்ணெய்கள் இறக்குமதியும், உற்பத்தியும் செய்யப்படுவதால் அதனைக் கொண்டு சமாளிக்க முடியும் என்கிறார்கள் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிபுணர்கள்.

தாங்கள் இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் கச்சா பொருள்கள், தங்களை வந்தடையும் வரை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் எதையும் உறுதியாகக் கூற முடியாது. எண்ணெய் இறக்குமதியாளர்களும், உடனடியாக விலை குறைந்த மற்றும் எளிதாகக் கிடைக்கும் மாற்று எண்ணெய் இறக்குமதிக்கு மாறும் நிலை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com