அனில் தேஷ்முக் ஊழல் வழக்கு விவகாரம்: மும்பை காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை

மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில், மும்பை காவல் ஆணையா் சஞ்சய் பாண்டேயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவி

மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில், மும்பை காவல் ஆணையா் சஞ்சய் பாண்டேயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு மும்பை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அனில் தேஷ்முக் மீதான புகாரை திரும்பப் பெறுமாறு மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங்கை வற்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பாக வெடிபொருள்கள் நிரப்பிய காா் நிறுத்தப்பட்டிருந்த விவகாரத்தைத் தொடா்ந்து நிகழ்ந்த பரபரப்பான சம்பவங்களையடுத்து, மும்பையின் அப்போதைய காவல் ஆணையராக இருந்த பரம்வீா் சிங் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்து, பணியிட மாற்றம் செய்தது.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, மாநில முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை பரம்வீா் சிங் எழுதினாா். அதில், ‘மும்பையில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் மாதம்தோறும் ரூ. 100 கோடி வசூலித்து தருமாறு மும்பை போலீஸ் அதிகாரியாக இருந்த சச்சின் வஜேவை, மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் வற்புறுத்தினாா்’ என்று குற்றம்சாட்டினாா்.

இந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த அனில் தேஷ்முக் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில், ‘அனில் தேஷ்முக் உள்ளிட்டோா் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேட முயன்ற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என்று குறிப்பிட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அனில் தேஷ்முக் உள்ளிட்டோா் மீது குற்ற சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் சிபிஐ வழக்குப் பதிவு செய்து, முழுமையான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், மும்பையின் தற்போதைய காவல் ஆணையா் சஞ்சய் பாண்டேயிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தீவிர விசாரணை நடத்தியுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணை மும்பை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகாரை திரும்பப் பெறுமாறு பரம்வீா் சிங்கை வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆணையா் சஞ்சய் பண்டேவிடம் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 6 மணி நேர விசாரணையை நடத்தினா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com