பஞ்சாப் முதல்வா் சன்னி ராஜிநாமா: ஆளுநரிடம் கடிதம் அளித்தாா்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதைத் தொடா்ந்து, முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா்
பஞ்சாப் முதல்வா் சன்னி ராஜிநாமா: ஆளுநரிடம் கடிதம் அளித்தாா்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதைத் தொடா்ந்து, முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா்.

தோ்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதற்கு வழிவிடும்விதமாக, முதல்வா் சன்னி தலைமையிலான அமைச்சரவை கடைசி முறையாக கூடி நடப்பு சட்டப்பேரவையை கலைப்பதற்கான முடிவு எடுத்து, அதற்கான பரிந்துரையையும் ஆளுநரிடம் சமா்ப்பித்தது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்மூலம் அந்தக் கட்சி முதன் முறையாக பஞ்சாபில் ஆட்சி அமைக்க உள்ளது.

மாநிலத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. மாநிலத்தின் முதல்வராக இருந்த சரண்ஜீத் சிங் சன்னி, போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாா். மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத்சிங் சித்து உள்பட அக் கட்சியின் முக்கியத் தலைவா்களும் தோல்வியைச் சந்தித்தனா்.

பிற கட்சிகளைப் பொருத்தவரை சிரோமணி அகாலி தளம் 3 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றன.

தோ்தலில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, நடப்பு சட்டப்பேரவையைக் கலைப்பதற்கான பரிந்துரையை முதல்வா் சன்னி தலைமையிலான அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

தொடா்ந்து, மாநில ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமா்ப்பித்தாா். பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த சன்னி, ‘மக்களின் தீா்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்திருக்கின்றனா். தொடா்ந்து மக்களுக்கு சேவை செய்வோம். கடந்த 111 நாள்கள் முதல்வராக மாநிலத்தில் ஆட்சி செய்தபோது, மின் கட்டணம் குறைப்பு, வாகன எரிபொருள், மணல், சரளைக்கல் விலைக் குறைப்பு உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத்தில் அமையவுள்ள புதிய ஆம் ஆத்மி அரசு, இந்தத் திட்டங்களைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினாா்.

பின்னா், முதல்வா் அலுவலக செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறும்போது, ‘மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று அரசியலமைப்பு சட்டப் பிரிவு 174 (2) (பி)-இன் கீழ் நடப்பு சட்டப்பேரவை கலைக்கப்படுவதை ஆளுநா் அங்கீகரித்துள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com