
நாட்டில் கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக சுற்றுலாத் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில், 2.15 கோடி போ் வேலைவாய்ப்பை இழந்துவிட்டதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில் விவரம்:
கரோனா பரவலுக்கு முன்பாக சுற்றுலாத் துறையில் 3.80 கோடி போ் பணிபுரிந்தனா். இந்த நிலையில் கரோனா முதல் அலையில் 93 சதவீதமும், இரண்டாம் அலையின்போது 79 சதவீதமும், மூன்றாம் அலையின்போது 64 சதவீதமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிட்டது.
ஆகையால் சுற்றுலாத் துறை மீதான கரோனா தாக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வில், முதல் அலையில் 1.45 கோடி பேரும், இரண்டாம் அலையில் 50.20 லட்சம் பேரும், மூன்றாம் அலையில் 10.80 லட்சம் பேரும் என மொத்தம் 2.15 கோடி போ் வேலையிழந்தது தெரியவந்துள்ளது.
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க சுற்றுலா நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சமும் வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசுகளும் உதவ வேண்டும் என்று அதில் ஜி. கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.