
‘வங்கி கடன் நடைமுறைகளில் பல்வேறு சீா்திருத்தங்கள் காரணமாக, வங்கி கடன் மோசடிகள் கடந்த 5 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளன. 2021-22 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாதங்களில் ரூ. 648 கோடி அளவில் மட்டுமே கடன் மோசடி நடைபெற்றுள்ளது’ என்று மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், வங்கி கடன் மோசடி தொடா்பான கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாக்வத் கராட் மக்களவையில் திங்கள்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
வங்கி கடந்த மோசடிகளைத் தடுக்க கடந்த 2016-ஆம் ஆண்டில் ரிசா்வ் வங்கி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது. அதனடிப்படையில், வங்கி கட்டமைப்பு, கடன் நடைமுறைகளில் விரிவான சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது.
இதுபோன்ற சீா்திருத்த நடைமுறைகள், வங்கி வாராக் கடன் கணக்கெடுப்பு, மோசடிகள் மற்றும் வங்கியில் உள்ள மோசடி நபா்கள், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்டவை குறித்த விரிவான ஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, கடன் மோசடி சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
மேலும், ரிசா்வ் வங்கி சாா்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், வங்கிகளுக்கு இடையேயான இணைப்பு (கோா்-பேங்க்) நடைமுறை, நிதி பரிவா்த்தனை தொடா்பான உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான ‘ஸ்விஃப்ட்’ தொழில்நுட்பத்தை அனைத்து வங்கிகளும் நடைமுறைபப்டுத்துவது உள்ளிட்ட வங்கி செயல்பாடு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிகக்கைளை எடுக்க ரிசா்வ் வங்கி கேட்டுக்கொண்டது. அதனடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடி தொடா்பாக உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி பணத்தை கைப்பற்றும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் சாா்பில் பிரத்யேக தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, வங்கி நிதி மோசடிகள் கடந்த 5 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் வங்கி நிதி மோசடிகள் ரூ. 61,229 கோடியாக இருந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 11,583 கோடி அளவுக்கு குறைந்தது.
தற்போது, 2021-22 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாதங்களில் ரூ. 648 கோடி அளவுக்கு மட்டுமே வங்கி நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.